எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து – இழப்பீடு வழங்க உத்தரவு

0
239
Article Top Ad

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாதார சேதத்திற்காக, 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டினை வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

இந்த இழப்பீட்டினை திறைசேரியின் செயலாளருக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் நாலக்க கொடஹேவா, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களுக்காக பேராயர் கரத்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பில், தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடலில் மூழ்கிய ஒரு சரக்கு கப்பலே எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகும். இது சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பலாகும்.விபத்து விபரம்:

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், 2021 மே மாதம் 20 ஆம் திகதி  கொழும்பு துறைமுகத்திற்கு அருகில்  தீ விபத்திற்கு உள்ளானது. கப்பலில் இருந்த நைட்ரிக் அமில கொள்கலன்கள் வெடித்தமையே விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டது.

இந்த விபத்தானது இலங்கையின் கடற்பகுதிக்கு ஒரு பெரிய சுற்றுச்சூழல் பேரழிவாக கருதப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்ததுடன், கடற்கரைகளில் கழிவுகள் குவிந்தன.மீன்பிடி தொழிலை பெரிதும் பாதித்தது. சுற்றுச்சூழல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோாடு, இந்த பாதிப்பு பல வருடங்களுக்கு நீடிக்கும் எனவும் கணிப்பிடப்பட்டது.