தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, யாழ்ப்பாணத்தில் “விடுதலை மரம்” என்ற பெயரில் புதிய பிரச்சாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் இல்லாமல் பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்த பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த பிரச்சாரத்தை “குரலற்றவர்களுக்கான குரல்” அமைப்பு முன்னெடுத்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் பயணத்தை ஆரம்பித்த நீர் சேகரிப்பு வாகனம், தமிழர் செறிந்து வாழும் எட்டு மாவட்டங்களுக்கு பயணம் செய்து பொதுமக்களிடமிருந்து நீரை சேகரிக்கும். இந்த நீர், நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவில் நடைபெற உள்ள நிகழ்வில் மரத்திற்கு ஊற்றப்படும்.
சொந்த பகுதியிலிருந்து ஒரு கோப்பை நீரை வழங்குமாறு மக்கள், சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது, சிறையிலுள்ளவர்களுக்கு வெளி உலகின் ஒற்றுமையையும் ஆதரவும் வெளிப்படுத்தும் சமிக்ஞையாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கில் அண்மையில் பல நிகழ்வுகள், பொதுக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கம் பலமுறை பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக கூறியபோதும், அது இன்னும் நடைமுறையில் உள்ளது. இது பெரும்பாலும் தமிழர்களையே குறிவைத்து செயற்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சிக்கின்றன.

