IMF திட்டம் தொடரும்; எதிர்ப்பு, அழுத்தங்கள் பயனில்லை – அமைச்சர் லால்காந்த உறுதி

0
183
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதியை,  அமைச்சர் கே.டி. லால்காந்த மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், அவர் கூறுகையில், “IMF திட்டத்திலிருந்து அரசாங்கம் விலகப்போவதில்லை. எவ்வித எதிர்ப்பும் அல்லது அரசியல் அழுத்தங்களும் எங்களை தடுக்க முடியாது. அரசாங்கம் திட்டமிட்ட இலக்குகளை அடைந்து வருகிறது. அது வெற்றிகரமாக அமையும். மீதமுள்ள சீர்திருத்தங்கள் தொடரும்.

அத்தோடு, 2028க்குப் பிறகு கடன் திருப்புச்செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்காக தேவையான அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் அல்லது அழுத்தங்களுக்கு அரசாங்கம் பின்வாங்காது. விலைகளை கூட தேவைக்கேற்ப அதிகரிக்க அல்லது குறைக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

IMF திட்டத்தின் கீழ் நாட்டின் பொருளாதார நிலைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் லால்காந்த, அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் உணர்வுகளைத் தூண்டிவிடும் எதிர்க்கட்சித் தலைவர்களின் அழுத்தத்துக்காக நாட்டின் முன்னேற்ற பாதையை விட்டுவிட முடியாது என்றார்.