தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகின்ற நிலையில், தற்போது மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. தாய்லாந்து விமானங்கள் கம்போடிய நிலப்பகுதியில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதிக்கான போர்நிறுத்தத்தைக் கோரி கம்போடியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முன்னதாக செய்யப்பட்ட இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி தாய்லாந்து படைகள் எல்லை அருகிலுள்ள விகாரை பகுதிக்குள் முன்னேறியதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது. இதில் சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் சுரின், உபோன் ரட்சதானி மற்றும் சிசாகெட் பகுதிகளில் 14 பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
பொருளாதார, வணிக மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மோதல் பெரிதும் தீவிரமாகும் சூழல் உருவாகியுள்ள நிலையில், கம்போடியா அமைதி முயற்சிகளை வலுப்படுத்தியுள்ளது. எனினும், இதற்கு தாய்லாந்து உடன்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, சர்வதேச சமூகம் இந்தச் சூழ்நிலையை கவனித்து, இரு நாடுகளையும் சமரச முயற்சிகளுக்கு இட்டுச் செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதேவேளை, தாய்லாந்து நேற்று (25) மாலை முதல் எட்டு எல்லை மாவட்டங்களில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. மேலும், எல்லைப் பகுதிகளில் இருந்து 130,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், கம்போடிய எல்லையில் உள்ள ஆறு தேசிய பூங்காக்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு சமரசத்திற்கும் தாய்லாந்து உடன்படாத நிலை காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இந்த மோதல் குறித்து அவசரக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

