யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளைக் கொண்டு, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெராவில் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஜூலை 22ஆம் திகதி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை உயர் ஸ்தானிகராலயம், ஐ.நா. அலுவலகம், அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை உள்ளிட்ட முக்கிய இடங்களை நோக்கி பேரணியாகவும் சென்றனர். இதில், புதைகுழியின் பரிமாணங்கள், அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள், மற்றும் சாட்சியங்கள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த புதைகுழியில் 100க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், யுனிசெஃப் வழங்கிய புத்தகப் பை மற்றும் மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் எலும்புக்கூடுகள் இருப்பது போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
போராட்டக்காரர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
-
செம்மணி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகள் குறித்த சர்வதேச விசாரணை
-
செப்டம்பர் 2025 ஐ.நா. அமர்வில் இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம்
-
இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு பயணத் தடை
-
சாட்சிகள் மற்றும் உயிர் தப்பியவர்களுக்கு பாதுகாப்பும் புகலிடமும்
-
தமிழர் நிலங்களை விடுவிக்க அழுத்தம்
-
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், PTA சட்டத்தை ரத்து செய்தல்
-
இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளல் மற்றும் நீதிக்கான வழி.
தமிழ் அகதிகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ரேணுகா இன்பகுமார் கூறியதாவது: “செம்மணியின் மண் பேசுகிறது. இது இனப்படுகொலையின் மறுக்க முடியாத சான்று. சர்வதேச சமூகம் இனி மௌனமாக இருக்க முடியாது” என்றார்.
செம்மணியில் நேற்று வரை 104 என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

