தேசபந்துவை பதவி நீக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

0
216
Article Top Ad

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கும் தீர்மானம், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (05) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில், எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார்.

இதன்படி குறித்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பெயரை அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி பரிந்துரைப்பார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பிறகு, ஜனாதிபதி, அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பெயரை பரிந்துரைப்பார்.

தனது பதவியை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தேசபந்து மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக அவர் ஏற்கனவே கைதாகி, கடந்த மார்ச் மாதம் கைதாகி, ஏப்ரலில் விடுதலையானார்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. கடந்த மாதம், தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்த விசாரணைக் குழுவின் முழு அறிக்கையையும் பெற்றதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன உறுதிப்படுத்தினார்.

இலங்கையின் அரசியலமைப்புச் செயற்பாட்டில் இதுபோன்ற விசாரணைக் குழுவொன்று, பதவியில் இருக்கும் பொலிஸ்மா அதிபர் ஒருவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்தமை இதுவே முதல் முறை என்பதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம் என்றும் சபாநாயகர் பாராளுமன்றில் குறிப்பிட்டார்.