செம்மணி மனித புதைகுழி தொடர்பாக சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான் தயார் என சோமரட்ன ராஜபக்ச சொல்லியிருந்தால் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையில் நிலத்திற்கு கீழ்தான் உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
செம்மணி சித்துபாத்தி மயானத்தில் இடம்பெறும் அகழ்வு நடவடிக்கையை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –
“1999ஆம் ஆண்டு சோமரட்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் சொன்ன கூற்றின் பிரகாரம் அப்போது 15 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கபட்டன. அதைத் தொடர்ந்து இப்போது தற்செயலாக கண்டெடுக்கப்பட்ட எலும்புகூட்டினால் தொடரும் அகழ்வு பணியில் நூற்றிற்கும் மேலான எலும்பு கூட்டு தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இப்போது கண்டெடுக்கப்படுகின்றவை அந்த வேளையில் சோமரட்ன ராஜபக்ச சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது.
அவர் 300 தொடக்கம் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டது என்றும் அதிலே இராணுவ உயர் அதிகாரிகள் பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் அப்போது சொன்ன விடயத்தின் உண்மைத்தன்மை, கால் நூற்றாண்டுக்கு பின்னர் அதாவது 25 வருடங்களுக்கு பின்னர் இப்போது வெளிப்படுகின்றது.
இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் இந்த உண்மைகள் பல புதைக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே இந்த மனித புதைகுழிகள் தோண்டப்படும் விடயமானது, உண்மை கண்டறியப்படும் செயன்முறையிலே மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பைச் செலுத்துகிறது.
பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. இது மூடி மறைக்கப்படும் அல்லது அப்பொழுது செம்மணியிலே செய்துவிட்டு கைவிட்டது போல அப்படியே இதுவும் கைவிடப்படுமா அல்லது மன்னாரில் அல்லது கொக்குத்தொடுவாய் அல்லது மாத்தறையில் நடந்ததைப் போல இருக்குமா என்று பலவிதமான சந்தேகங்கள், கேள்விகள் பலருக்கு இருக்கின்றன.
ஆகையினால் தான் இதனை வெளிப்படைத்தன்மையோடு செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்கின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினுடைய வெவ்வேறு அணிகள் அது பொலிஸாக இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகமாக இருக்கலாம் பல்கலைக்கழகமாக இருக்கலாம் அகழ்வு பணிகள் செய்பவர்களாக இருக்கலாம் இவர்கள் எல்லாம் இதனைச் சேர்ந்து செய்திருந்தாலும் கூட மக்களுக்கு இது சம்பந்தமாக ஒரு நம்பிக்கை ஏற்படுவதாக இருந்தால் நிச்சயமாக ஆரம்பத்தில் இருந்தே சர்வதேச மேற்பார்வை இருக்க வேண்டுமென நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம்.
இந்த அகழ்வு பணிகள் ஆரம்பித்த வேளையிலேயே நாங்கள் இது சம்பந்தமாக ஐனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறோம். ஐனாதிபதிக்கு தான் அந்த கடிதத்தை எழுத முடியும். ஏனென்றால் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தான் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகையினாலே வெறுமனே இப்படியான நிபுணத்துவம் இல்லாத தரப்புக்களை வைத்து இதனைச் செய்யாமல் முழுமையாக ஒரு சர்வதேச ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும்.
செம்மணி தொடர்பில் சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான தயார் சோமரட்ன ராஜபக்ச சொன்னதாக செய்திகள் வந்திருக்கிறது. அந்தச் செய்தி உண்மையானால் அதற்கு வழி செய்து கொடுக்க வேண்டும்.
சர்வதேச மன்று ஒன்றிலே அவரை நிறுத்தி அவருடைய கூற்றுக்களைப் பெற்று அவர் சொல்லும் விடயத்துடன் இந்த சம்பவம் ஒத்துப்போகின்றதா என பார்க்க வேண்டும். இது ஒரு திருப்புமுனையான சம்பவமாக நாங்கள் கருதுகிறோம்.
வேண்டுமென்றே தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தற்கால சான்றுகள் இங்கே இருந்து ஆரம்பமாகிறது போலவும் தோன்றுகிறது.
ஆகவே இதற்கான சான்றுகளை சேகரிக்கிற பொறிமுறைகள் விசேடமாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே தற்பொழுது ஒஸ்லெப் என்ற பொறிமுறை இருக்கிறது. அதாவது சான்று பதிவு செய்வதும் பாதுகாப்பதுமான பொறிமுறை. அவை எல்லாம் வரவழைக்கப்பட்டு இங்கே நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அரச அதிகாரிகள் அல்லது அரச திணைக்களங்கள் இதிலே சற்று பின்னடிப்பது பற்றிய சந்தேகங்கள், சில சம்பவங்கள் மூலமாக எங்களுக்கு தெரிய வருகிறது. ஆகவே அரசாங்கத்திற்கு நாங்கள் சொல்வது இதிலே முழுமையான வெளிப்படைத் தன்மையோடு முழுமையான சர்வதேச மேற்பார்வையோடு இவை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். ஆகையால், ஒரு சர்வதேச பொறிமுறை இதற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
மேலும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கும் செம்மணி வழக்கை இங்கே இடமாற்ற வேண்டும். இங்கே இருந்த வழக்கை அப்பொழுது சந்தேக நபர்களாக இருந்த இராணுவத்தினர் இங்கே பாதுகாப்பு போதாதென்று கூறி அநுராதபுரத்திற்கு மாற்றி பின்னர் கொழும்பிற்கு மாற்றப்பட்டு அங்கே வழக்கு இருக்கிறது. ஆகையினாலே அந்த வழக்கை இங்கே திரும்பவும் கொண்டுவந்து இந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும்” என்றார்.

