உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தரப்பினர்களின் ஆதரவையும் திரட்டி கையொப்பங்கள் பெறப்பட்டதன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை, குறித்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் தம்மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பகிரங்க நம்பிக்கைக்கு இணங்க செயலாற்றுதல் முக்கியமானதாகும் என அவர்களுக்கான நடத்தைக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் நடவடிக்கைள் எப்போதும் நேர்மையுடனும், ஒருமைப்பாட்டுடனும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது மீறப்பட்டுள்ளதாகவும் அதன்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

