இளைஞர் கழகங்களின் அரசியல்மயமாக்கல் – அரசியல் சர்ச்சை தீவிரம்

0
182
Article Top Ad

இலங்கையில் இளைஞர் கழகங்களின் அரசியல்மயமாக்கல் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்து, அரசியல் தலைவர்களிடையே கூர்மையான கருத்து மோதல்கள் எழுந்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (10) நடைபெற்ற Citizen Voice வேலைத்திட்ட சந்திப்பில் பேசுகையில், இளைஞர் கழகங்கள் தற்போது முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டு, அரசாங்கத்தின் அரசியல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தேசிய இளைஞர் சம்மேளனத்தின் தெரிவில் ஆளும் தரப்பின் ஆதரவாளர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கு இடமளிக்கப்படாதென குறிப்பிட்ட சஜித், “இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீட்டுத் தருவோம்” என்று உறுதியளித்தார்.

இளைஞர் கழகங்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நேற்று இதுகுறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

தனது உரையில், “இளைஞர் சங்கங்கள் அரசியல் பயன்பாட்டுக்காக அல்ல, இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக” உருவாக்கப்பட்டவை என்று நினைவூட்டினார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தான் ஆரம்பித்த இந்த இயக்கம், இளைஞர்களை சமூகத்தின் பல துறைகளில் முன்னேற்றியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் நோக்கங்களுக்காக இந்த இயக்கத்தை மாற்றும் எந்த முயற்சியும் அதை பலவீனப்படுத்தும் என்றும், முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அரசாங்கம் மீதான இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர பதிலளித்துள்ளார். முந்தைய அரசாங்கங்களே இளைஞர் கழகங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக தேசிய இளைஞர் மன்ற நிதி பயன்படுத்தப்பட்டதாகவும், கோடிக்கணக்கான ரூபாய் மோசடிகள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அரசு 12,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இளைஞர் சங்கங்களை நிறுவி, 32 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இளைஞர் கழகங்களின் பங்கு மற்றும் சுதந்திரம் குறித்த இந்த அரசியல் விவாதம், எதிர்காலத்தில் இளைஞர் சமூக இயக்கத்தின் திசையை தீர்மானிக்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.