காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு

0
177
Article Top Ad

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

காசா நகரில் உள்ள அல்ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது நேற்று (10) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அல்-ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், 28 வயதான அல்-ஜசீரா செய்தியாளர் அல்-ஷரீப், தனது எக்ஸ் (X) பக்கத்தில் “காசா நகரின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது” என்று பதிவு செய்திருந்தார்.

இதனிடையே, அல்-ஜசீரா ஊடகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தக் கொலைகள் “கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு நேரடி தாக்குதல்” எனக் குறிப்பிட்டுள்ளது.

“காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் பேரழிவு விளைவுகளுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் இடைவிடாமல் படுகொலை செய்யப்பட்டும், கட்டாய பட்டினி கிடந்தும், முழு சமூகங்களும் அழிக்கப்பட்டும் வருகின்றன. காசாவின் துணிச்சலான பத்திரிகையாளர்களில் ஒருவரான அனஸ் அல் ஷெரீஃப் மற்றும் அவரது சகாக்களைப் படுகொலை செய்வதற்கான உத்தரவு, காசா கைப்பற்றப்படுவதையும் ஆக்கிரமிப்பையும் அம்பலப்படுத்தும் குரல்களை அடக்குவதற்கான ஒரு தீவிர முயற்சியாகும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொடர்ச்சியான இனப்படுகொலையை நிறுத்தவும், பத்திரிகையாளர்களை வேண்டுமென்றே குறிவைப்பதை முடிவுக்குக் கொண்டுவரவும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தையும் அனைத்து தொடர்புடைய அமைப்புகளையும் அல் ஜசீரா கேட்டுக் கொண்டது.

காசாவில் துணிச்சலாக களத்தில் நின்று உண்மைகளை வெளிப்படுத்திய அனஸ் அல்-ஷெரீஃப்பை 2024 ஆம் ஆண்டிற்கான “மனித உரிமைகள் பாதுகாவலர்” என்று சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த வருடம் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.