முல்லைத்தீவு மாவட்ட முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் மரணித்த சம்பவம் தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத்தின் அதிகப்படியான இருப்பும், அத்துமீறிய நடத்தையும் குறித்து இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், 2025 ஓகஸ்ட் 7ஆம் திகதி முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் உள்ள 63வது படைப் பிரிவு முகாமுக்கு அழைக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவரான 32 வயதான கபில்ராஜ் என்பவர், இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் காணாமல் போயிருந்தார். பின்னர் அவரது உடல் முத்தையன்கட்டு குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்த விரிவான, தடையற்ற விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் அதிகப்படியான இருப்பை உடனடியாக நீக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையும், தொடர்ந்து நடைபெறும் இராணுவ அத்துமீறல்களையும் கண்டித்து, வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையாக ‘ஹர்த்தால்’ நடைபெறும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

