அரசியல்வாதிகளே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களை வளர்த்துள்ளனர் –பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

0
70
Article Top Ad

அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனேயே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் வளர்ந்துள்ளதாகவும், தங்களின் இருப்பு மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே இந்தக் குற்றவாளிகள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் கைதான குற்றவாளிகள் தொடர்பாக இன்று (28) நடத்திய விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இந்தோனேசிய பொலிஸார் நடத்திய 7 நாள் கூட்டு நடவடிக்கையின் பின்னர் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், விரைவில் அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நடவடிக்கைக்கு இந்திய புலனாய்வு அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளதுடன், அதற்கேற்ப திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், முடங்கிப் போயிருந்த புலனாய்வு அமைப்பின் சில பகுதிகள் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

அரசியல்வாதிகள் தமது இருப்பிற்காகவே இவ்வாறான குற்றவாளிகளை வளர்த்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு அவை அனைத்தையும் நிறுத்தியுள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை உருவாக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவுகள் குறித்து தற்போது உன்னிப்பாக விசாரித்து வருவதாகவும், அவர்களது சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நடைமுறையில் கொண்டுவருவோம் என்றும், வாக்குறுதியளித்தபடி, சமூகத்திற்கு ஒரு வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் வழங்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

பாதாள உலக குழு,  அரசியல்வாதிகள், பொலிஸார், அதிகாரிகள் என யாராக இருந்தாலும், அனைவரும் சட்டத்திற்கு உட்பட்ட நாடாக மாற்றுவோம் என அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.