வடக்கிலுள்ள புதைகுழிகளை மூடி மறைப்பதற்காகவே யாழ்ப்பாணத்துக்கு வந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கின்றார் என சில தமிழ் அரசியல்வாதிகள் கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்றும், மக்கள் உண்மையை அறிவார்கள் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் நேற்று (02) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், செம்மணி புதைகுழியை தோண்டுவதற்கு நிதி ஒதுக்கீடு, ஸ்கேன் இயந்திரத்தை ஏற்பாடு செய்தது, புதைகுழியை பாதுகாப்பதற்கு இரவுநேரங்களில் காவலாளிகளை அமர்த்தியது என அனைத்தையும் அரசாங்கமே செய்துள்ளது என குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதியும் வாக்குறுதி வழங்கியுள்ளார் என மேலும் தெரிவித்தார்.
ஆகவே, மக்களை திசைதிருப்பி ஏமாற்றும் விடயங்கள் இனியும் பலிக்காது என்றும், மக்கள் அவர்களை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும், தமது அரசாங்கம் தற்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது என்றும் அமைச்சர் சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.

