டிக்டொக் எதிர்காலம், வர்த்தகப் போர் குறித்து ட்ரம்ப்- ஜின்பிங் கலந்துரையாடல்

0
71
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இடையே நேற்று (19) தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளதோடு, டிக்டொக் பயன்பாட்டின் எதிர்காலம் உட்பட பல முக்கிய சர்வதேச மற்றும் இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வரி குறித்த கடும் நடவடிக்கைகளுக்குப் பின்னர், கடந்த ஜூன் மாதத்திற்குப் பின் இருவருக்கும் இடையே நடைபெற்ற முதல் உரையாடல் இதுவாகும். ஆகவே உலக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. உரையாடலைத் தொடர்ந்து ட்ரம்ப், “டிக்டொக் ஒப்பந்தத்தின் ஒப்புதல் குறித்து முன்னேற்றம் காணப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். ஆனால், டிக்டொக் தொடர்பான ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

சீன அரசாங்கம், இந்த உரையாடலை “நடைமுறை சாத்தியமானதும், நேர்மறையானதும் கட்டமைப்பு ரீதியானதுமாக இருந்தது” என்றும் வர்ணித்தது. மேலும், இரு தலைவர்களும் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், அமெரிக்காவின் ஒற்றைத் தரப்பு வர்த்தகத் தடைகள், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற உலகளாவிய சவால்களைப் பற்றியும் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரையாடலின் போது ஸி ஜின்பிங், அமெரிக்கா விதித்து வரும் வர்த்தகத் தடைகளை நீக்குமாறு வலியுறுத்தினார். அதேசமயம், ட்ரம்ப், வரும் நவம்பர் மாதம் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மன்றத்தில் ஸி ஜின்பிங்குடன் நேரடியாக சந்திப்பதாகவும், அடுத்த ஆண்டு சீனாவில் உத்தியோகபூர்வமாக சந்திப்பதற்கான திட்டமும் உள்ளதாகவும் அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீன நிறுவனமான பைடான்ஸ் (ByteDance) நடத்தும் டிக்டொக் பயன்பாட்டின் அமெரிக்க கிளையை விற்பனை செய்யாவிட்டால், அமெரிக்க அரசு தடை செய்யும் என எச்சரித்தது. பயனர் தரவு (இடம், தொடர்புகள், பயன்பாட்டு பழக்கங்கள்) சீன அரசின் கைகளுக்கு செல்லக்கூடும் என்ற அமெரிக்காவின் கரிசனையே இதற்குக் காரணம்.