ஒற்றுமையின்மையால் தமிழ் மக்கள் விரக்தியில் உள்ளனர் – செல்வம் அடைக்கலநாதன்

0
79
Article Top Ad

தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தினாலேயே கடந்த தேர்தலில் யாருக்கு வாக்குப் போடுவது என்ற குழப்பத்தில் மக்கள் புதிய அரசை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்குச் சென்றனர் என்றும், ஒற்றுமை இன்மையால்  தமிழ் மக்கள் விரக்தியில் உள்ளனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதே நிலை தொடர்ந்து, வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்று கட்சிகளின் அதிகாரங்களிற்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

மாகாணசபை தேர்தலினை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை விடுகின்ற இச்சந்தர்ப்பத்திலே அதிகார பரவலாக்களின் ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்தியாவும் ஐ.நா சபையிலே கோரிக்கையினை முன்வைத்துள்ளது என்றும், என்றால் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று இந்திய தூதுவரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார் என்றும் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது கூறினார்.

எங்களுடைய மக்களுடைய எதிர்காலம், இனப்பிரச்சினை, எமது மண் பறிபோகாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக போராட வேண்டும்.
எனவே அதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, ஐ.நாவிற்கு கடிதம் எழுதும் போதோ அல்லது ஐநாவிற்கு கையொப்பம் இடுகின்ற சந்தர்ப்பத்தின் போதோ ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் கட்சிகள், தேர்தல் காலத்தில் மாத்திரம் ஒற்றுமையாக இருக்காமல் பிரிந்து செல்லுகின்ற அபாய நிலை இருக்கின்றது என்றும், இந்த ஒற்றுமை இன்மையின் பலனை கடந்த தேர்தல்களில் அனுபவித்தோம் என்றும் சுட்டிக்காட்டினார்.