எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவு – இலங்கைக்கு மட்டுமன்றி உலகிற்கே எச்சரிக்கை மணி

0
225
Article Top Ad

இலங்கையின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய பேரழிவுக்கு, கப்பல் இயக்குபவர்கள் இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இலங்கை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், கப்பலை இயக்கிய சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் நிறுவனமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ், இந்த நீதிமன்ற உத்தரவை நிராகரித்துள்ளது. இந்த தீர்ப்பு சர்வதேச கடல்சார் வர்த்தக விதிமுறைகளை பொறுப்பு வரம்புகள் குறித்து குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கப்பல் இலங்கையின் சுற்றுப்புற சூழலுக்கும் கடல்வளத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதோடு, அதன் தாக்கம் இன்றும் நீடிக்கின்றது. கடல்வளத்தை நம்பியுள்ளவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. இவை வெறும் இழப்பீட்டினால் மாத்திரம் ஈடுகட்ட முடியாத சம்பவமாகும். எனினும், தற்போது இழப்பீட்டினையும் செலுத்த தவறுவதானது, அந்நிறுவனத்தின் அலட்சியத்தையே வெளிப்படுத்துகின்றது.

இதற்கெதிராக சுற்றுச்கூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் விசனம் தெரிவித்துள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நிறுவனம் பணம் செலுத்த மறுத்ததை கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும் சுற்றுச்சூழல் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக இழப்பீட்டைப் பெற தேசிய ஒற்றுமைக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பேரழிவும் நீதிமன்ற உத்தரவின் பின்னணி

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) என்ற சரக்கு கப்பல்  ஜூன் 2021ஆம் ஆண்டு தீப்பற்றி, பின்னர் அது கொழும்புக் கடற்கரைக்கு அருகில் மூழ்கியது. இந்தக் கப்பலில் அமிலங்கள், ஈயக் கட்டிகள், பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் எடுத்து செல்லப்பட்டிருந்ததால், இலங்கையின் மேற்கு கடற்கரையெங்கும் பெரும் கடல்சார் மாசுபாடு ஏற்பட்டது. இந்த பேரழிவு கடல் உயிரினங்களுக்கு நச்சுத் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மீன்பிடி தடை  விதிக்கப்பட்டதால் உள்ளூர் சமூகங்கள் பாதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் மிகக்கடுமையான பாதிப்புக்குள்ளானது.

ஜூலை 2025 இல், இலங்கையின் உயர் நீதிமன்றம், கப்பல் இயக்குபவர்கள் மற்றும் உள்ளூர் முகவர்கள், சுற்றுச்சூழல் சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட, நாட்டிற்கு ஆரம்ப 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சமூகங்களின் மறுசீரமைப்பு மற்றும் ஆதரவிற்காக இழப்பீட்டு நிதியை வழங்குதல் மற்றும் பயன்படுத்துவதை மேற்பார்வையிடுவதற்கான வழிமுறைகளையும் நீதிமன்றம் நிறுவியது.

நிறுவனத்தின் நிராகரிப்பு மற்றும் சட்ட நிலைப்பாடு

உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு அடிப்படையான பொறுப்பின் வரம்பு என்ற சட்டக் கொள்கையின் அடிப்படையில் இதனை நிராகரிப்பதாக, எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பு உலகளவில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும், இது கப்பல் நிறுவனங்களுக்கு காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிப்பதற்கும் கணிக்க முடியாத பொறுப்புகளுக்கும் வழிவகுக்கும் என்றும் நிறுவனம் அஞ்சுகிறது. பேரழிவிற்கு வருத்தம் தெரிவித்து, $170 மில்லியனுக்கும் அதிகமான செலவை ஏற்படுத்தும் தூய்மைப்படுத்தும் முயற்சிகளை ஒப்புக்கொண்டாலும், 1 பில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நிராகரிப்புக்கு எதிராக கரிசனை

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய கப்பல் நிறுவனம் இழப்பீட்டை செலுத்த மறுத்ததற்கு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் கடுமையான கவலையை வெளிப்படுத்தியது.  இந்தக் கப்பல் ஏற்படுத்திய பேரழிவால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு அந்த நிறுவனத்தை பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்தது.

சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் மீனவர் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் பேரழிவால் ஏற்பட்ட பெரும் சேதத்துக்கு இலங்கை அதிகாரிகள் தாமதமாக பதிலளித்ததை கடுமையாக விமர்சித்துள்ளனர். அவர்கள், உடனடி நடவடிக்கை எடுக்காததற்காக அரசாங்க அமைப்புகளை குற்றம் சாட்டி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க கடுமையான சுற்றுச்சூழல் சட்டங்களும் அவற்றின் செயற்பாடுகளும் அவசியம் என வலியுறுத்தினர்.

மேலும், பாதிக்கப்பட்ட கடலோர மக்கள் மற்றும் கடல் சூழல் அமைப்புகளுக்கு நீதியை வழங்க நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் பல்லுயிரியலையும் ஆபத்தில் ஆழ்த்தும் பிளாஸ்டிக் துகள் மாசுபாடு மற்றும் ரசாயன மாசுபாட்டிலிருந்து நீண்டகால சேதத்தை வலியுறுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது கட்சியினருடன் சேர்ந்து, நீதிமன்ற உத்தரவை மதிக்க நிறுவனம் மறுத்ததைக் கண்டித்தார். பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் கடலோர சமூகங்களை ஆதரிப்பதற்காக, நியாயமான இழப்பீட்டைக் கோருவதில் தேசம் ஒன்றுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், இலங்கை உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதன் உத்தரவுகளை செயற்படுத்துவதை உறுதி செய்வதற்காக விசாரணைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த தொடர்ச்சியான மோதல் சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் நீதிக்கு இடையிலான பதட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. இது பெருநிறுவன பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்துறை பேரழிவுகளை அடுத்து பாதிக்கப்படக்கூடிய கடலோர சமூகங்களின் பாதுகாப்பு பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

இது, சட்டத்தின் பலவீனங்களைப் பயன்படுத்தி பெருநிறுவனங்கள் தப்பித்துக் கொள்ளும் அபாயத்தையும், அதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் சுமக்க வேண்டிய நீண்டகால விளைவுகளையும் வெளிப்படுத்துகிறது. இழப்பீட்டை மறுப்பது நிறுவனத்தின் பொறுப்பின்மையையும் அலட்சியத்தையும் வெளிப்படுத்துகின்ற நிலையில், நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை மட்டுமன்றி சர்வதேச சமூகமும் இணைந்து அழுத்தம் கொடுப்பது அவசியம். ஏனெனில், இந்த பேரழிவிற்கு இலங்கை மக்கள் விலைகொடுத்துள்ளதோடு, எதிர்கால சந்ததிக்கும் இதன் தாக்கம் தொடர வாய்ப்புண்டு.

செய்தியாக்கம் – கே.கே.