காற்றாலை எதிர்ப்பு, மக்களுக்கு வைக்கப்பட்ட பொறி – சந்திரசேகர்

0
31
Article Top Ad

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையானது, மக்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் வைக்கப்பட்ட பொறி என்றும் அதில் சிக்கவேண்டாம் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மன்னாருக்கு எவ்வித அபிவிருத்திப் பணிகளும் கொண்டுவர விரும்பாத அதே சந்தர்ப்பத்தில், கடந்த காலத்தில் இந்த திட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்களே இப்போது இவ்வாறான சதியில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்ற நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

காற்றாலை திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகள் கடந்த காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டத்துக்காக பல்லாயிரக்கணக்கான நிதி செலவிடப்பட்டுள்ளதால் அதனை நிறைவுசெய்ய அனுமதிக்குமாறும் அமைச்சர் கோரினார்.

மன்னாரில் கடந்த காலங்களில் ஆரம்பிக்கட்ட காற்றாலை மின்திட்ட திறப்பு விழாவுக்கு சென்றவர்கள், கம்பனிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள், பொதுமக்களின் காணிகளை கம்பனிகளுக்கு பெற்றுக்கொடுத்தவர்களே இன்று இந்த போராட்டத்தின் பின்னணியில் உள்ளார்கள் என குறிப்பிட்ட அமைச்சர் சந்திரசேகர், மன்னாரை மீட்பதில் எம்மை விட அக்கறை உள்ளவர்கள் வேறு எவரும் கிடையாது என்றார்.

திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அடித்தளம் இடப்பட்டு ஏராளமான வேலைகள் நிறைவடையும் வரை மௌனித்தவர்கள், இன்று எதிர்ப்பு தெரிவிக்கின்றமை ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

காற்றாலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மக்கள் குறிப்பிட்டால், அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டால் நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம், எனினும் இதுவரை அவ்வாறான பாதிப்புகள் ஏற்படவில்லை என்றார்.

இதேவேளை, காற்றாலை திட்டத்திற்கான உதிரிப்பாகங்கள் அண்மையில் கொண்டுசெல்லப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காணொளிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.