சமாதானத்திற்கான நோபல் பரிசு ட்ரம்பை பாதித்துவிட்டதா?

0
273
Article Top Ad

சமாதானத்திற்கான நோபல் பரிசானது, உலகின் மிகவும் மரியாதைக்குரிய விருதுகளில் ஒன்றாகும். 1901 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, உலக சமாதானத்திற்காக, தூதரக முயற்சிகளுக்காக மற்றும் மனிதநேயச் செயல்களுக்கு முக்கிய பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் அமைதி, வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. ஜனநாயக உரிமைகள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக அவர் காட்டிய தைரியம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ள எதிரவினையால், இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்பின் கருத்து

2025 ஜனவரியில் மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப், தன்னை சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என பலமுறை கூறியிருந்தார். தனது ஆட்சிக் காலத்தில் எட்டு மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான சமாதான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், நோர்வே நோபல் குழுவானது, மச்சாடோவைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், ட்ரம்ப் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துள்ளார். நோபல் பரிசுக் குழுவான, சமாதானத்திற்கு மேலாக அரசியலை வைத்துள்ளதென அவர் விமர்சித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, சமாதானத்திற்கான நோபல் பரிசு வெற்றியாளரான  மச்சாடோ அவரை நேரடியாக அழைத்து, ‘இந்த விருதை உங்கள் கௌரவத்திற்காக பெற்றேன்’ என்று கூறியதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் நகைச்சுவையையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு ட்ரம்பிற்கே இந்த விருதை வழங்கியிருக்கலாம் என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ட்ரம்ப் மேலும் கூறியுள்ளதாவது, இந்த விருது உண்மையில் 2024 ஆம் ஆண்டில் நடந்த சாதனைகளுக்காக வழங்கப்பட்டது என்றும், ஆனால் ஜனவரி 2025க்கு பின் நடந்த தனது முக்கிய சமாதான முயற்சிகள் பரிசீலிக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

ஆதரவாளர்களின் கருத்து

ட்ரம்ப் கூறும் சமாதான முயற்சிகள் மற்றும் தூதரக நடவடிக்கைகள் என்பன உண்மையில் நோபல் பரிசுக்கு தகுதியானவை என்று ட்ரம்பின் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் உலகளவில் கவனிக்கப்பட வேண்டியவை என்றே அவர்கள் கூறுகின்றனர்.

வெள்ளை மாளிகையின் பேச்சாளர், நோபல் குழுவின் இந்த முடிவானது அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளதோடு, ட்ரம்பின் சாதனைகளை உலகளாவிய சமாதானம் மற்றும் மனிதநேயத்துக்கான வரலாற்று பங்களிப்பு என விவரித்துள்ளார்.

விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்கள்

ட்ரம்பின் கூற்றுகள் மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் அரசியல் நோக்கத்துடன் கூறப்பட்டவை என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அவர் கூறும் சில மோதல்கள் இன்னும் முடிவடையாதவையாகவோ, அல்லது பகுதியளவில் மட்டுமே தீர்க்கப்பட்டவையாகவோ உள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், சமாதானத்திற்கான நோபல் பரிசு பெரும்பாலும் நீண்டகால மற்றும் உண்மையான சமாதான முயற்சிகளுக்கே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மச்சாடோவின் தேர்வு, ஜனநாயகத்தை காப்பாற்றிய தைரியமான முயற்சியை உலகம் முன் வைக்கும் தீர்மானமாகப் பாராட்டப்பட்டது.

மேலும், ட்ரம்ப் தனது பிரச்சாரத்தை மிகத் தாமதமாகத் தொடங்கியதாகவும், அவர் குறிப்பிடும் பல முயற்சிகள் ஜனவரி 2025ல் நிறைவேறியதால், அவை பரிந்துரைக்குள் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ட்ரம்ப் இன்னும் தன்னை சமாதானத்தின் முயற்சியாளராகவே காண்பிக்க  முயற்சி செய்து வருகிறார். ஆனால் நோபல் குழு, தங்களின் முடிவுகள் அரசியல் அழுத்தங்களால் எடுக்கப்பட்டதல்ல என்றும், தகுதி மற்றும் உண்மையான பங்களிப்புகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றன எனவும் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. இந்த சர்ச்சை, உலக அரசியலில் ‘சமாதானம்’ என்ற சொல் எவ்வளவு அரசியல் வலிமையையும் சிக்கலையும் உடையது என்பதை வெளிப்படுத்துகின்றது. இன்று சமாதானத்திற்கான நோபல் பரிசு என்பது ஒரு விருதை விடவும், உலகின் நியாய உணர்வு மற்றும் அதிகாரத்திற்கு இடையிலான நுட்பமான சமநிலையை பிரதிபலிக்கும் ஒரு சின்னமாக மாறியுள்ளது.

செய்தியாக்கம் – கே.கே.