பிலிப்பைன்ஸை தொடர்ச்சியாக தாக்கும் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

0
68
Article Top Ad

பிலிப்பைன்ஸில் தொடர்ச்சியாக வலுவான நிலநடுக்கங்கள் தாக்கி வருகின்றதால், அம்மக்களிடையே அச்சத்தையும், சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று (17), யூனியன் நகருக்கு அருகிலுள்ள சியர்காவ் தீவில் 69 கி.மீ ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது யூரேசிய தட்டுக்கு அடியில் பிலிப்பைன்ஸ் கடல் தட்டின் நகர்வால் ஏற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் மற்றும் வீடுகளை உலுக்கியது, ஆனால் பெரிய கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இவ்வாறு நிலநடுக்கம் பதிவாவதால், மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

முன்னதாக, செப்டம்பர் 30 அன்று, வடக்கு செபுவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது அங்கு இதுவரை பதிவான வலிமையான மற்றும் 2013 க்குப் பிறகு ஏற்பட்ட மிகவும் மோசமான நிலநடுக்கமாகும். இதில் குறைந்தபட்சம் 76 பேர் உயிரிழந்தனர். 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த்தோடு, 112,000 க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தின் பின்னர், மேலும் சில அதிர்வுகள், நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு, தொடர் மின்தடைக்கும் வழிவகுத்தது. மக்கள் அச்சத்தின் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறிச் சென்றதோடு, பாடசாலைகள் மூடப்பட்டன.

ஒக்டோபர் 10 மற்றும் 16 ஆகிய திகதிகளிலும் இரண்டு சக்திவாய்ந்த கடலோர நிலநடுக்கங்கள் – 7.4 மற்றும் 6.8 அளவுகளில் ஏற்பட்டன.  இதனால் டாவோ ஓரியண்டல் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டன. கட்டிடங்கள் மற்றும் பாலங்களுக்கு சேதம் ஏற்பட்டதோடு, மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

அரசாங்கமும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனங்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்கின்றன. ஆனால் பல பகுதிகள் இன்னும் மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்கின்றன.

ஒட்டுமொத்தமாக, சமீபத்திய பூகம்பங்கள் பெரும் மனித மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.