அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீண்ட நாள் கனவாக இருந்த வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடித்து, புதிய பால்ரூம் (Ballroom) அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாகவும் விளங்கும் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி 1902ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இதுவரை பலமுறை மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1942 ஆம் ஆண்டு கட்டடத்துக்கு இரண்டாவது மாடி சேர்க்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலைன் லெவிட் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடித்து, பிரமாண்டமான விருந்துகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்காக ஒரு பால்ரூம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது அவரது அந்த கனவு நனவாகும் வகையில் 220 மில்லியன் டொலர் மதிப்பில் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “கடந்த 150 ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனாதிபதியும் வெள்ளை மாளிகை வளாகத்தில் விருந்துகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கான ஒரு பிரமாண்ட பால்ரூம் அமைக்க வேண்டும் என்று கனவு கண்டுள்ளனர். வரி செலுத்துவோருக்கு எந்தச் சிரமமும் இன்றி, அந்த கனவை நனவாக்கிய முதல் ஜனாதிபதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பணிகளின் போது, முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் மற்றும் கிழக்குப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்கள் என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

