ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபராக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக கருதப்படும் நான்கு பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், அவரது மனைவியின் தாயார், மதுகம ஷான் என்ற குற்றவாளியின் உதவியாளர் மற்றும் மற்றொருவர் உள்ளடங்கலாக நான்கு பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கியதாகக் கூறப்படும் மதுகம-வெலிபென்ன பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், பொலிஸ் கான்ஸ்டபிளின் மனைவியின் தாயார் நேற்று முன்தினம் (19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை ஒக்டோபர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏனைய மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய முன்னிலையில் நேற்று (20) ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணையைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவர்களையும் ஒக்டோபர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

