ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) மீது, அமெரிக்கா புதிய தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய அளவில் எண்ணெய் விலைகள் 3% க்கும் மேல் உயர்ந்துள்ளன.
இந்த தடைகள், ரஷ்யாவின் உக்ரைன் போருக்கான நிதி ஆதாரங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. இதனால், 2022ல் உக்ரைன் மீது நடந்த ரஷ்ய ஆக்கிரமிப்புக்குப் பிறகு தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கிய இந்தியா போன்ற நாடுகள், இப்போது தங்கள் எண்ணெய் கொள்முதல் குறித்த தீர்மானங்கள மீண்டும் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நடவடிக்கை, கிரெம்லின் வருவாயை முடக்கவும், ரஷ்ய எண்ணெய் வழங்கல்களை சீர்குலைக்கவும் நோக்கமாக கொண்டுள்ளதென ரஷ்ய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல நாடுகள் மாற்று எண்ணெய் ஆதாரங்களைத் தேட வேண்டிய சூழல் உருவாகி, உலகளாவிய எண்ணெய் விலைகள் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கான காரணம் என்ன?
ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) நிறுவனங்கள் ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் சுமார் பாதியை பிரதிநிதித்துவப்படுத்துவதாலும், உக்ரைனில் நடைபெறும் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கிய நிதி ஆதாரமாக இருப்பதாலும், அமெரிக்கா இந்நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது.
இது, ரஷ்யா மீது அழுத்தம் அதிகரித்து, போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்கச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள தந்திரத்தின் ஒரு பகுதியா என்பது இப்போதுள்ள கேள்வியாகும்.
மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவையும், ரஷ்யாவின் எல்.என்.ஜி (LNG) இறக்குமதியைத் தடை செய்வது உள்ளிட்ட புதிய தடைகளை விதித்து, ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதிகள் மீது பொருளாதார கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
இந்த ஆண்டு தினமும் சுமார் 1.7 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்திருந்த இந்தியா, தற்போது தனது கொள்முதல் முடிவுகளை மறுபரிசீலனை செய்து வருகிறது.
ரஷ்ய கச்சா எண்ணெயின் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கொள்முதல் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries), இந்த இறக்குமதிகளை குறைப்பதற்கோ அல்லது முழுமையாக நிறுத்துவதற்கோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், அரசு கட்டுப்பாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களும் புதிய தடைகளுக்கு இணங்க தங்களது ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இருப்பினும், இந்தியாவுக்கு வரும் பல ரஷ்ய எண்ணெய் கொள்முதல்கள் ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகியவற்றிடமிருந்து நேரடியாக அல்லாமல், இடைநிலை முகவர்கள் வழியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
உலக எண்ணெய் சந்தைகளில் தாக்கம்
இந்த தடைகள் காரணமாக பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் $64.71 ஆகவும், அமெரிக்கா வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (U.S. West Texas Intermediate) விலை சுமார் $60.59 ஆகவும் உயர்ந்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் வழங்கல் குறையக்கூடும் என்ற அச்சமே இந்த விலை உயர்விற்கு காரணமாகும். ஏனெனில் பல நாடுகள் தடைகளை தவிர்க்க ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறைத்து வருகின்றன.
மேலும், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்புகள் எதிர்பாராதவிதமாக குறைந்ததாலும், விலை உயர்வுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
எனினும், சில பொருளாதார நிபுணர்கள், எண்ணெய் விலைகளின் இவ்வாறு ஏற்பட்ட திடீர் உயர்வை நிலையான மாற்றமாக அல்லாமல், அரசியல் பதற்றங்களுக்கு சந்தை அளிக்கும் தற்காலிக எதிர்வினையாக பார்க்கின்றனர்.
வரலாற்று ரீதியாக, ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட பல தடைகள் அதன் எண்ணெய் ஏற்றுமதியின் அளவை பெரிதாக பாதிக்கவில்லை. காரணம், மாற்று வர்த்தக வழிகள் மற்றும் இடைமுறை பரிமாற்றங்கள் மூலம் ரஷ்யா தனது விற்பனையைத் தொடர்ந்துள்ளது.
அதேவேளை, ஓபெக்+ (OPEC+) கூட்டணி, நவம்பர் மாதத்தில் தினசரி சுமார் 1,37,000 பீப்பாய் அளவுக்கு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இது, தற்போதைய விலை அழுத்தத்தை ஓரளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளை இது எவ்வாறு பாதிக்கும்?
ரஷ்ய எண்ணெய் மீது பெரிதும் சார்ந்திருக்கும் ஆசிய நாடுகள் போன்றவை, இத்தடைகளின் விளைவாக வழங்கல் சீர்குலைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கலாம். இதனால், அவை மற்ற பிரதேசங்களிலிருந்து, குறிப்பாக அமெரிக்க எண்ணெய் வழங்கலில் இருந்தும் கச்சா எண்ணெயை பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். இது, அட்லாண்டிக் சந்தையில் (Atlantic market) எண்ணெய் விலைகளை மேலும் உயர்த்தும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.
மேலும், எரிசக்தியை இறக்குமதி செய்யும் நாடுகள் அதிக செலவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகி, அது பெரும்பணவீக்கத்திற்கும் (inflation) மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாகுவதற்கும் காரணமாக இருக்கலாம்.
இலங்கையை பாதிக்குமா?
ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கியுள்ள இலங்கை, எண்ணெய் விலை உயர்வால் தீவிர சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
போக்குவரத்து, மின்சார உற்பத்தி மற்றும் தொழில் துறைகளுக்காக, பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயையே இலங்கை சார்ந்துள்ளது. கடந்த காலங்களில் எண்ணெய் விலைகள் திடீரென உயர்ந்தபோது, அது இலங்கையின் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கி, எரிபொருள் பற்றாக்குறை, நீண்ட மின்வெட்டுகள், பொது போக்குவரத்து மற்றும் வணிக நடவடிக்கைகள் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தியது.
இப்போது, தடைகள் மற்றும் வழங்கல் நிச்சயமின்மை காரணமாக எண்ணெய் விலைகள் மேலும் உயர்ந்தால், அது பணவீக்கத்தை அதிகரித்து, வாழ்க்கைச் செலவுகளை உயர்த்தி, மற்றும் அத்தியாவசிய இறக்குமதிகளுக்குத் தேவையான வெளிநாட்டு நாணய கையிருப்புகளைப் பெற அரசாங்கம் போராடும் நிலையில், அதன் நிதிநிலை மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு விதித்துள்ள இந்த தடைகள், மொஸ்கோவின் போர் நிதியை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தந்திர நடவடிக்கை என நோக்கப்பட்டாலும். இதன் விளைவுகள் கடுமையானவை.
இலங்கை போன்ற எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு, இது அதிக எரிசக்தி செலவுகள், பொருளாதார சிரமங்கள் மற்றும் சமூக அழுத்தங்களை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
செய்தியாக்கம் – கே.கே.

