2025ஆம் ஆண்டில், இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கற்ற குற்றச் செயல்கள் பெருகி, பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, கடற்படை மற்றும் சுங்கத்துறையுடன் சேர்ந்து, அரசாங்கம் வரலாற்றில் இல்லாத அளவிலான போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
போதைப்பொருள் பறிமுதல் மற்றும் கைது தொடர்பான 2025 தரவுகள் (செப்டெம்பர் வரை)
- ஹெரோயின்: 955 கிலோ
- கிரிஸ்டல் மெத்தாம்பட்டமின் (ஐஸ்): 1,422 கிலோ
- ஹேஷிஷ்: 471 கிலோ
- கொக்கைன்: 29 கிலோ
- கஞ்சா: 13,770 கிலோ
- போதை மாத்திரைகள்: 35 இலட்சம் (3.5 மில்லியன்)
- மொத்தமாக கைது செய்யப்பட்டவர்கள்: 104,000-க்கும் மேற்பட்டோர்
- போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி குற்றங்களில் தொடர்புடையவர்கள்: 4,630 பேர்
- பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள்: 1,721
இந்த தரவுகள் மூலம், இலங்கை போதைப்பொருள் கடத்தலின் முக்கிய மையமாக மாறிவருகிறது என்பதை உணரக்கூடியதாக உள்ளது.
கடற்படை வழியாக கடத்தல்
இலங்கையின் நீளமான கடற்கரைப் பகுதி அமைவிடமும், போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய வழிகளாக பயன்படுத்தப்படுகின்றன. மீன்பிடி படகுகள் மற்றும் சிறிய கப்பல்கள் மூலம் ஹெரோயின், மெத்தாம்பட்டமின் போன்ற ஆபத்தான போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன. சமீபத்திய சுற்றிவளைப்புகளில் சுமார் 500 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுடன் மட்டுமல்லாது, தங்கம், கையடக்கத் தொலைபேசிகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் போன்ற உயர்மதிப்புள்ள பொருட்களின் சட்டவிரோத கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற 1 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கடத்தல் முயற்சியை சுங்கத்துறையினர் முறியடித்துள்ளனர்.
வன்முறை சம்பவங்கள்
போதைப்பொருள் கடத்தல் அதிகரித்ததன் விளைவாக, அதனைச் சார்ந்த குற்றவியல் பிரதேசங்களுக்குள் வன்முறை மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, போதைப்பொருள் விற்பனைப் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் கிளை குழுக்கள் ஒன்றுக்கொன்று எதிராக துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவங்கள் பெருகியுள்ளன.
பொலிஸ் புள்ளிவிவரங்களின்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் சிலர் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் என்றாலும், பலர் குற்றச்செயலில் சம்பந்தமில்லாத பொதுமக்களாக இருந்துள்ளனர்.
இத்தகைய வன்முறைகள், இலங்கையின் பல நகரங்களில் குறிப்பாக கொழும்பு, நீர்கொழும்பு, மற்றும் தெற்கு மாகாணங்களில் சமூக அச்சத்தையும் பாதுகாப்பு குறித்த கரிசனையையும் உருவாக்கியுள்ளன. பெரும்பாலான சம்பவங்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை சுற்றியே நடைபெறுகின்றன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் சமூகப் பங்களிப்பு
போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, சிறப்பு பாதுகாப்புப் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பல்துறை இணைந்த சேவைகள் (multi-agency coordination) மூலம் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களிடையே போதைப்பொருளின் அபாயங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் நாடு முழுவதும் கல்வி மற்றும் தகவல் பரவல் பரப்புகை செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, சமூகத்தின் ஒத்துழைப்பை ஊக்குவித்து, மக்கள் தாங்களே போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது.
மேலும், போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, மனநல ஆலோசனை மற்றும் மீள்நலப் பயிற்சிகள் வழங்கும் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.
“போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எந்தவித தளர்வும் வழங்கப்படமாட்டாது. இதில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள்மீது சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு” என அண்மையில் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக மக்களும் இவ்விடயத்தில் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, போதைப்பொருளுடன் தொடர்புடைய வன்முறைகள், மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் கட்சி பேதம் இன்றி ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இன்றைய இளம் சமுதாயம் அழிவுப் பாதைக்கு செல்வதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக போதைப்பொருள் உள்ளது. குறிப்பாக பாடசாலை சிறார்களையும் இலக்குவைக்க தொடங்கியுள்ளமையானது, புத்திகூர்மையான எதிர்கால சந்ததி உருவாகுவதை முற்றாக அழிக்கும் நாசகார செயற்பாடாகும்.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் தற்போது ஒரு சட்டப் பிரச்சனையாக மட்டுமல்ல, ஒரு சமூக மற்றும் தேசிய பாதுகாப்பு சவாலாகவும் மாறியுள்ளது. போதைப்பொருளின் வேர்களை பிடுங்கி ஒழிப்பதற்காக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பொதுமக்களும் அதில் பங்கேற்பது முக்கியமான கட்டமாக உள்ளது. போதைப்பொருள் வலையமைப்புகளை முழுமையாக வேரறுக்க அரசாங்கம் உறுதியுடன் செயற்படும் என ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் வேறுபாடுகளை கடந்து, சமூகமும் அரசாங்கமும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே இலங்கை ஒரு போதைப்பொருள் இல்லா நாடாக உருவாக முடியும். இவ்வாறு, சட்ட அமுலாக்கமும் சமூக ஒத்துழைப்பும் இணைந்தால் மட்டுமே எதிர்கால தலைமுறைக்காக பாதுகாப்பான, ஆரோக்கியமான, மற்றும் நேர்மையான சமூகத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.
செய்தியாக்கம் – கே.கே.

