ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவோம்

0
42
Article Top Ad

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் தண்டனையின்மை என்ற முக்கிய பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த நாள் பெயரிடப்பட்டது. யுனெஸ்கோவின் ஆய்விற்கு இணங்க. 2006ஆம் ஆண்டிலிருந்து இதுவரை உலகளவில் 1,700க்கும் மேற்பட்ட  ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றில் சுமார் 90% வழக்குகளும் இன்னும் தீர்க்கப்படாதவையாகவே உள்ளன என்பதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புணர்வின்மை இன்னும் நீடிக்கிறது என்பதை காட்டுகிறது.

இந்த நாள், ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த  உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதற்குமான நாளாகும். உலகம் முழுவதும் பல அமைப்புகளும், தனிநபர்களும் இந்த நாளை முன்னிட்டு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, நீதி, மற்றும் ஊடக உரிமைகளைப்  பேணுவதற்கான சட்ட அமுலாக்கம் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கின்றனர். ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) தீர்க்கப்படாத வழக்குகளை வெளிப்படுத்தி, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கங்களை வலியுறுத்துகிறது.

ஊடகவியலாளர்கள் ஜனநாயக சமூகங்களில் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்கள் நம்பகமான தகவல்களை வழங்கி, ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கின்றனர். அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அவர்களின் பாதுகாப்பை மட்டுமின்றி,  கருத்துரிமையையும், மக்களின் தகவல் பெறும் உரிமையையும் பாதிக்கின்றன. இதன் மூலம் ஜனநாயகத்தின் அடித்தளமே இங்கு சீர்குலைக்கப்படுகிறது.

இலங்கையின் நிலைமை

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் தண்டனையின்மை தொடர்பான ஒரு நீண்ட மற்றும் வேதனையூட்டும் வரலாறு உள்ளது. 2000 முதல் 2010 வரையிலான காலத்தில் சுமார் 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை ஒருவருக்கும் நீதி வழங்கப்படவில்லை. 2005 முதல் 2015 வரை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள், கடத்தல்கள், சித்திரவதை மற்றும் கொலைச்சம்பவங்கள் அரங்கேறின. .

சமீப ஆண்டுகளில் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்களையும் பொருட்படுத்தாமல், இலங்கையில் ஊடகவியலாளர்களின் சூழ்நிலை இன்னும் ஆபத்தானதாகவே உள்ளது. 2025ஆம் ஆண்டின் நாடாளுமன்ற பதிவுகளின்படி சில தாக்குதல் மற்றும் கடத்தல் வழக்குகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் உண்மையான எண்ணிக்கைகள் மறைக்கப்படுகின்றன என ஊடக சுதந்திரத்திற்காக குரல்கொடுப்போர் கூறுகின்றனர்.

2025 உலக ஊடகச் சுதந்திர குறியீட்டில் இலங்கை தாழ்ந்த நிலையில் உள்ளது. இதன் மூலம், நாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், மனஅழுத்தங்கள், மற்றும் தண்டனையின்மையால் உருவாகும் சுய தணிக்கைப்படுத்தல் போன்ற பிரச்சினைகள் வெளிப்படுகின்றன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் பெரும்பாலானவை இன்னும் தீர்க்கப்படாதவையாகவே உள்ளன. இதனால் ஊடகத் துறையில் பயம் மற்றும் மௌனம் நிலவுகிறது.

சர்வதேச மற்றும் உள்ளூர் முயற்சிகள்

உலகளவில், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவரவும், பஊடகவியலாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (IFJ) மற்றும் UNESCO தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இந்த நாளில், ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரணை செய்யப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் உலக அரசுகளிடம் அவை வலியுறுத்துகின்றன.

இலங்கையில், தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்காகவும், நீதிக்கான பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காகவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. சட்ட அமுலாக்க அமைப்புகள் மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்களின் அவசியத்தை சமீபத்திய அறிக்கைகள் வலியுறுத்துகின்றன. ஊடகவியலாளர்கள் மீதான குற்றங்களைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும், ஊடக சுதந்திரத்தை ஜனநாயகத்தின் அடிப்படை தூணாக நிலைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவை தெரிவிக்கின்றன.

செய்தியாக்கம் – கே.கே.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here