2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கைக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது, 2020 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளுக்குப் பின், நாட்டின் வாகன சந்தை மீண்டும் சூடுபிடித்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
இந்த வளர்ச்சி, வெளிநாட்டு வர்த்தக சமநிலையிலும், நாணய நிலைத்தன்மையிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகளின் பின்னணி
2020 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டு நாணய பற்றாக்குறை காரணமாக இலங்கை கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. இதனால், தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்களின் இறக்குமதி பெரிதும் தடைசெய்யப்பட்டது.
ஆனால் 2025 ஆம் ஆண்டில், அரசாங்கம் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி, சில நிபந்தனைகளுடன் மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியது. இத்தீர்மானமானது, பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, அரச வருமானத்தை உயர்த்தும் நோக்கத்தையும் கொண்டதாக அமைந்தது.
இறக்குமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் வாகன இறக்குமதி மாதந்தோறும் சராசரியாக 286 மில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.
முதல் நான்கு மாதங்களில் மட்டும், 145.6 மில்லியன், 125.2 மில்லியன், மற்றும் 169.6 மில்லியன் டொலர் மதிப்பிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
இது, வாகன சந்தையில் ஒரு மீளெழுச்சியை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக வர்த்தக வாகனங்கள் மற்றும் புதிய ஹைபிரிட்/மின்சார வாகனங்களுக்கான கோரிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சந்தை நிலைவரங்கள் தெரிவிக்கின்றன.
நாணய நிலைத்தன்மை பாதிக்கப்படுமா?
வாகன இறக்குமதி அதிகரிப்பது, நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்புகளை குறைக்கும் பிரதான காரணங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த இரண்டு வருடங்களில் குறிப்பிடத்தக்களவு நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், வாகன இறக்குமதிக்காக அதிகளவான பணம் வெளியேறியுள்ளமையானது, நாணய அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாகன இறக்குமதி ஒரு குறுகியகால வர்த்தக வளர்ச்சியை ஏற்படுத்தினாலும், நீண்டகாலத்தில் இது நாணயச் சந்தையை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாய்ப்புகளின் பின்னால் மறைந்துள்ள சவால்கள்
போக்குவரத்து மற்றும் வாகன இறக்குமதியின் அதிகரிப்பு, வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தக வருவாயை உயர்த்தும் வகையில் குறுகியகாலத்தில் சாதகமாக அமையலாம்.
எனினும், இலங்கை நாணயத்தின் நிலைத்தன்மை, வெளிநாட்டு கடன்சுமை மற்றும் வர்த்தக சமநிலை ஆகியவை தொடர்ந்தும் சவாலாகவே உள்ளன. அதிகமான வாகன இறக்குமதி, வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தை அதிகரித்து, நாணயச் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதும் பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை.
சமநிலையான கொள்கை அவசியம்
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம், வெளிநாட்டு நாணய நிலைத்தன்மையையும் உள்நாட்டு தொழில்துறை வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட வேண்டியது அவசியம்.
அதற்கு, இறக்குமதி வரையறைகள் மற்றும் வரி கொள்கைகளை தெளிவாகப் பராமரித்தல், உள்நாட்டு வாகன பராமரிப்பு, உதிரிப் பாக உற்பத்தி மற்றும் சேர்க்கைத் துறைகளுக்கு ஊக்கமளித்தல், வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தை குறைக்கும் முதலீட்டு கொள்கைகளை உருவாக்கல் மற்றும் நிதி மற்றும் நாணய நிலைத்தன்மையை உறுதி செய்யும் மத்திய வங்கி நடவடிக்கைகள் ஆகியவை முக்கியமாகும்.
இந்த முயற்சிகள், நீண்டகாலத்தில் வாகன இறக்குமதியால் ஏற்படும் பொருளாதார அழுத்தத்தை குறைத்து, நாட்டின் நிதி சமநிலையை நிலைநிறுத்த உதவும்.
வாகன இறக்குமதி மீள்தொடக்கம், இலங்கையின் பொருளாதாரம் மீள்கட்டமைப்பை நோக்கி நகர்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், அது சமநிலையற்ற வளர்ச்சியைக் குறிக்கவும் முடியும். ஆகவே, நிதி கட்டுப்பாடுகளுடன் பொருளாதார விரிவாக்கத்தையும் ஒருங்கிணைக்கும் திறனே, இலங்கையின் எதிர்கால பொருளாதார பாதையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
செய்தியாக்கம் – கே.கே.

