அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக ஸோஹ்ரான் மம்தானி பதவியேற்றுள்ளமையானது, உலக அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று உலகையே மிரள வைக்க எத்தனிக்கும் ட்ரம்பிற்கு சவாலாக ஒரு இளைஞன் வெற்றிபெற்றுள்ளமைதான் இங்கு இந்த பேசுபொருளுக்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. இது ஒருபுறம் இருக்க, இவரது பதவியேற்பானது, நகரத்தின் அரசியல் சூழலை மாற்றுவதோடு, குடிமக்கள் சமூகங்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியுயோர்க் சமூகத்தின் அரசியல் குரலை வலுப்படுத்தும் புதிய யுகத்தை தொடங்கியுள்ளார் என்றே மம்தானி கருதப்படுகின்றார்.
நகர அரசியலில் புதிய முன்மாதிரி
மம்தானி தனது பிரசாரத்தில் பஸ் கட்டண திருத்தம், குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவாக்குதல் மற்றும் வருமானம் அதிகமான நபர்களுக்கு அதிக வரி விதித்தல் போன்ற விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியபடி, இந்த கொள்கைகள் வீடு, போக்குவரத்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை சேவைகளை பொதுமக்களுக்கு எளிதில் அணுகத்தக்கவாறு மேம்படுத்தும் நோக்கத்துடன் வகுக்கப்பட்டதாகும். ஆகவே மம்தானி ஆட்சியில், நகராட்சி கொள்கைகள் சமூக நலனையும் சமத்துவத்தையும் முன்னிலைப்படுத்துவதாக அமையும் என்பது தற்போதைய எதிர்பார்ப்பாகும்.
சிறுபான்மை சமூகங்களுக்கான அரசியல் பங்கேற்பு
மம்தானியின் ஆட்சியால், குறிப்பாக குடிமக்கள், சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் அரசியலில் முக்கிய பங்கு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மக்களது முக்கிய பிரச்சனைகளாக காணப்படும் வீட்டு வாடகை, கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு என்பன, நேரடியாக நகராட்சி நிர்ணயங்களில் பிரதிபலிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால், சமூகத்தின் அரசியல் குரல் வலுவடையும் மற்றும் அவர்களது தேவைகள் அரசியலில் முக்கியத்துவம் பெறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாடுகள்
மாம்தானியின் திட்டங்கள் இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டில் ஈடுபடுத்தும். அடிமட்டத்தில் இயங்கும் அமைப்புகள், சமூக நல அமைப்புகள் மற்றும் பாடசாலை-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் அரசியல் செயற்பாட்டில் அதிக பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் நகர அரசியலையும், குடிமக்கள் பங்களிப்பையும் விரிவாக்கும் நிலையை எதிர்காலத்தில் காணக்கூடியதாக இருக்கும்.
இலங்கையர்களின் கருத்து
மம்தானியின் வெற்றியை சிறுபான்மையினரின் வெற்றியாக இலங்கையர்களும் கொண்டாடி வருவதை சமூக ஊடகங்களில் அவதானிக்க முடிகின்றது. “எம்மைப் போன்ற குடிமக்கள் கூட உயர் பதவிகளை எட்டலாம்” என்ற நம்பிக்கையை இது தருகிறது என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.
இளைஞர்கள் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் அதிக பங்கு பெற வேண்டும் என்பது மம்தானியின் வெற்றி சிறந்த உதாரணம் என்று சிலர் குறிப்பிடும் அதே சந்தர்ப்பத்தில், அரசியல் சவால்கள் மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகள் மம்தானியின் திட்டங்களை செயற்படுத்த தடையாக இருக்கலாம் என்றும் சிலர் கவலைப்படுகின்றனர்.
சமூக சமத்துவம் மற்றும் எதிர்கால சவால்கள்
மம்தானியின் ஆட்சியால், நகரில் சமூக ஒற்றுமை, இன ஒற்றுமை மற்றும் சமத்துவம் மேம்படும் வாய்ப்புண்டு என கருதப்பட்டாலும், வருமான உயர்வு, அரசியல் எதிரிகள் மற்றும் பொருளாதார சவால்கள் போன்ற பிரச்சனைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவர் காய்நகர்த்த வேண்டியுள்ளது.
மம்தானியின் வெற்றியுரை மிகவும் கோபமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அவர் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என்றும், அவர் பணியாற்றுவதை பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். பல திட்டங்களுக்கு தானே ஒப்புதல் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள ட்ரம்ப், மறைமுகமாக ஒரு எச்சரிக்கையை விடுத்திருப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
ஆகவே, இந்த மேயர் பதவி நிச்சயமாக மம்தானிக்கு ஒரு பஞ்சு மெத்தையாக அமையப்போவதில்லை. மாறாக சவால்களும் சச்சரவுகளும் நிறைந்த ஒரு சவாலான பயணமாகவே அமையப்போகின்றது. அதனை எவ்வாறு வெற்றிகொள்வார் என்பதே அவரது சாணக்கியமாகும்.
செய்தியாக்கம் – கே.கே.

