வரவு செலவுத் திட்டம்: மீளெழுச்சிக் கனவுகளுக்கும் நிஜச் சவால்களுக்கும் இடையிலான சமநிலை

0
72
Article Top Ad

2026ஆம் ஆண்டுக்கான வரவுத் திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு தற்போது அது குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பல்தரப்பட்ட எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஒருசிலருக்கு இது மீளெழுச்சிக்கான நம்பிக்கையின் அறிகுறியாக இருந்தாலும், ஏனையோருக்கு இது இன்னும் காத்திருக்க வேண்டிய ஒரு “வாக்குறுதி ஆவணம்” என்றே தோன்றுகிறது.

மக்களின் எதிர்வினைகள்

கடந்த சில வருடங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை போன்ற சவால்களுக்குப் பின்னர், மக்கள் இந்த வரவுத் திட்டத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர். அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவ திறன், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் விலைவாசி கட்டுப்பாடு போன்ற துறைகளில் நடைமுறை ரீதியான முன்னேற்றம் கிடைக்கும் என மக்கள் நம்பினர். அரசு ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாணல், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான நிதி உதவி, மேலும் விவசாயிகளுக்கான மானியங்கள் வழங்கல் போன்றவை பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன. இளைய தலைமுறை, குறிப்பாக, தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறைகளில் அதிக முதலீடுகளை கோருகிறது. இதன் நோக்கம் வெளிநாட்டுக்குப் புலம்பெயர்வைத் தடுக்கவும், உள்ளூரில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ஆகும். ஆனால், தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முறை வட்டாரங்களில் ஏமாற்ற உணர்வு நிலவுகிறது. பொருளாதார மீளெழுச்சி என்பது புள்ளிவிவரங்களில் மட்டுமே காணப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். மத்திய வங்கி பணவீக்கத்தை 5% இலக்குக்குள் கட்டுப்படுத்தும் முயற்சியில் இருப்பது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கூடுதல் வாழ்க்கைச் செலவின அழுத்தத்தை ஏற்படுத்தும் எனும் அச்சத்தையும் தூண்டியுள்ளது.

அரசியல் எதிர்வினைகள்

அரசியல் ரீதியாக, அரசாங்கம் மற்றும் நிதியமைச்சு, சர்வதேச நாணய நிதியத்தின்  நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் கடைப்பிடிக்க வேண்டிய நிதி ஒழுங்கும் சீர்திருத்தங்களும் முக்கியம் என வலியுறுத்துகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகள், இந்த வரவுத் திட்டம் உண்மையான வளர்ச்சி நோக்கங்களையும் சமூகப் பாதுகாப்புகளையும் புறக்கணிக்கிறது என்று குற்றஞ்சாட்டுகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை மீறியதாக இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவு அமைந்துள்ளதென எதிர்த்தரப்பினர் கடுமையாக விமர்சிக்கின்றனர். மூத்த பிரஜைகள், வறிய தரப்புகள் மற்றும் விவசாயிகள் போன்றோருக்கான போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அதிக மூலதனச் செலவுகள் தேவை என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதே நேரத்தில், அரசாங்கம் நிதி ஒழுங்கை பேணுவதற்கும், IMF நிதி ஆதரவைக் தொடர்ந்து பெறுவதற்கும் அழுத்தத்தில் உள்ளது. இது கொள்கைச் சுதந்திரத்தை குறைத்தாலும், நீண்டகால நிலைத்தன்மைக்காக அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

மொத்த மதிப்பீடு

இந்த வரவுத் திட்டம் சர்வதேச அளவில் நிதி ஒழுங்கையும், IMF அளவுகோள்களையும் பேணியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சிலர் நேர்மறையாக மதிப்பிட்டுள்ளனர். இது நிலையான மீளெழுச்சிக்கான ஒரு படிமுறையாகவே கருதப்படுகிறது. எனினும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை விரைவில் மேம்படுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகள் இல்லாமல், புள்ளிவிவர வெற்றிகள் மட்டும் போதாது என்ற எண்ணமும் பரவலாக உள்ளது. மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கும் திறனும், திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றும் திறனும் அரசாங்கத்தின் வெற்றிக்கான முக்கிய முனைப்பாக கருதப்படுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான வரவுத் திட்டம், இலங்கையின் பொருளாதார சீர்திருத்த பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையலாம். ஆனால் தெளிவான கொள்கை நடைமுறைப்படுத்தல், சமூக நியாயம், மற்றும் அரசாங்கத்தின்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது. சீர்திருத்தங்களுக்கும் சமூக நலன்களுக்கும் இடையிலான சமநிலையை எவ்வாறு பேணுகிறது என்பதே, இந்த வரவுத் திட்டத்தின் உண்மையான வெற்றியை தீர்மானிக்கும். செய்தியாக்கம் – கே.கே.