கனடாவும் இந்தியாவும் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்தும் புதிய விரிவான பொருளாதார கூட்டாண்மை உடன்படிக்கை (CEPA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
G20 உச்சி மாநாட்டின் ஒருங்கிணைந்த சந்திப்பில் கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கார்னி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலில், இந்த உடன்படிக்கை நிறைவேறினால் இருநாட்டு வர்த்தகம் தற்போது உள்ள 30.9 பில்லியன் டொலரிலிருந்து 70 பில்லியன் டொலருக்கு மேல் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கிடையிலான உறவு பதற்றமடைந்திருந்த நிலையில், 2023 இல் நிறுத்தப்பட்ட CEPA பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
கனடா பிரதமர் கார்னி, இந்தியா “நம்பகமான வர்த்தக பஙடகாளர்” என தாம் கருதுவதாகவும், சில முரண்பாடுகள் இருந்தாலும் அதனை தீர்க்க உரிய அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, கனடா சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்து, “இந்தியா நம்பகமான பங்காளியா?” என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், இருநாடுகளுக்கும் இடையிலான உறவு, பேச்சுவார்த்தைகள் மூலம் வலுப்படும் என கூறினார்.
2026 தொடக்கத்தில் பிரதமர் கார்னியை இந்தியாவுக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கனடா ஏற்றுக்கொண்டுள்ளது.
இருநாடுகளும் தற்போது தூதரகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்துள்ளன. இந்தியா, கனடாவின் ஏழாவது பெரிய வர்த்தக பங்காளராகும். இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மக்கள் கனடாவில் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
புதிய CEPA முயற்சியானது, இருநாடுகளின் உறவை புத்தாக்கம் பெறச் செய்ய எடுத்த முக்கிய படிமுறையாக கருதப்படுகிறது.

