மட்டக்களப்பில் தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றல்: அரசியல் பின்னணி என்கிறார் சுனில் செனெவி

0
114
Article Top Ad

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் தொல்பொருட்கள் காணப்படும் இடங்களை அடையாளப்படுத்தி வைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இச்சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தேவையே இருப்பதாக த்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான கலாநிதி ஹினிதும சுனில் செனெவி குற்றம்சாட்டியுள்ளார்.

தொல்பொருள் திணைக்களம் நீண்ட காலமாக புராதன சின்னங்கள் உள்ள இடங்களை அடையாளப்படுத்தி, பெயர் பலகைகள் மற்றும் திசைகாட்டிகளை நிறுவி வருகிறது. இவ்வருடம் நவம்பர் 3 ஆம் திகதி முதல் மட்டக்களப்பிலும் அம்பாறை மாவட்டத்திலும் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இது சாதாரண செயல்பாடாகும், புதிதாக தொடங்கப்பட்ட திட்டமோ அல்லது குழப்ப நிலைமையோ அல்ல என்ற அமைச்சர் கூறியுள்ளார்.

அத்தோடு, அரசாங்கத்திற்குச் சொந்தமான, சட்டரீதியாக நிறுவப்பட்ட பலகைகள் ஒரு குழுவால் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. வாழைச்சேனை, பட்டிப்பளை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்துக்கு இது தொடர்பான அறிக்கைகள் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், தொல்பொருள் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், பெயர் பலகைகள் நிறுவுவதற்கு உள்ளூராட்சி அனுமதி தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இச்சம்பவம் அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை என்றும்,  அரசாங்கம் முறையாக, விரைவாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் சுனில் செனவி கூறியுள்ளார்.

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் அவசரமாக நடப்பட்ட தொல்பொருள் இடம் என்ற பெயர்ப் பலகைகள் 22.11.2025 அன்று பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.