நாடு முழுவதும் அனர்த்த நிலைமை தீவிரம் – உயிரிழப்பு 334 – 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

0
81
Article Top Ad

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இன்று (30) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையின்படி, 370 பேர் காணாமல் போயுள்ளனர்.

நாட்டைத் தாக்கிய கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 மரணங்கள் பதிவாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், நுவரெலியாவில் 68 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளையில் 23 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கண்டியில் 150 பேர், நுவரெலியாவில் 64 பேர், பதுளையில் 53 பேர், குருநாகலில் 35 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதனிடையே, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (30) மாலை 4 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின் மூலம் பதுளை, கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 7 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு 24 மணி நேரத்திற்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அபாய நிலையில் உள்ள பகுதிகள்:
பதுளை மாவட்டம் – ஊவ, பரணகம, ஹல்துமுல்லை, வெலிமடை, பசறை, சொரணாதோட்ட, எல்ல, லுணுகலை உள்ளிட்ட பல பிரதேசங்கள்.
கொழும்பு மாவட்டம் – பாதுக்கை, சீதாவக்க.
கண்டி மாவட்டம் – உடுநுவர, பஸ்பாகே கோறளை, யட்டிநுவர, குண்டசாலை, ஹரிஸ்பத்துவ உள்ளிட்ட பல பகுதிகள்.
கேகாலை மாவட்டம் – மாவனெல்லை, ரம்புக்கன, அரநாயக்க உள்ளிட்ட பிரதேசங்கள்.
குருநாகல் மாவட்டம் – மாவத்தகம, மல்லவப்பிட்டிய, அலவ்வ.
மாத்தளை மாவட்டம் – பல்லேபொல, ரத்தோட்ட, நாஉல, வில்கமுவ.
நுவரெலியா மாவட்டம் – தலவாக்கலை, வலப்பனை, அம்பகமுவ, கொத்மலை மேற்கு மற்றும் கிழக்கு.

இதற்கிடையில், “தித்வா” புயல் நாட்டை விட்டு விலகி வடக்கு திசையை நோக்கி நகரும் சாத்தியம் அதிகம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.