சிட்னி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: துப்பாக்கி சட்டங்களில் மாற்றங்கள் குறித்து அவுஸ்திரேலிய அரசு ஆலோசனை

0
37
Article Top Ad

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்குவது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்காக தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, ஒருவருக்கு வழங்கப்படும் துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல், அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்யும் காலக்கெடு ஒன்றை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (14) சிட்னி பொண்டி கடற்கரையில் இரண்டு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 10 வயதுச் சிறுமி ஒருவரை உட்பட இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் 50 வயதுடைய சஜிட் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகனான நவீட் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நடவடிக்கையின் போது சஜிட் அக்ரம் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், சஜிட் அக்ரம் 1998 ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவர் என்றும், அவரது மகன் நவீட் அக்ரம் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நவீட் அக்ரம்  பயங்கரவாத அமைப்பொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், சஜிட் அக்ரம் விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் 2015 ஆம் ஆண்டிலிருந்து துப்பாக்கி அனுமதிப்பத்திரம் பெற்றிருந்தவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.