மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்படும் எந்தவொரு கட்டத்தின் கீழும் மண்சரிவு சம்பவங்கள் ஏற்படக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
NBRO-வின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர இதுகுறித்து விளக்கமளிக்கையில், மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு என மூன்று கட்டங்களாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். அந்தந்த பிரதேசங்களில் பதிவாகும் மழைவீழ்ச்சி அளவுகளின் அடிப்படையிலேயே இவ்வறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்ட பகுதிகளிலேயே மண்சரிவு ஏற்படும் எனக் கருத முடியாது என்றும், முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்ள பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் காணப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் பாரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்ள சில பகுதிகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட மண் மேடுகள் சரிந்து விழுதல், கற்பாறைகள் புரளுதல் போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் எனவும் அவர் கூறினார். இதனை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, கலபட, பியனில்ல, வீரியபுர, உடபத மற்றும் புளத்கொஹுபிட்டிய உள்ளிட்ட சில பகுதிகள் மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பிரதேசங்களாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவில் மண் சரிவுகள் நிகழ்வதாகவும் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

