துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் எதிரொலி – கிரீன் கார்ட் திட்டத்தை நிறுத்தினார் ட்ரம்ப்

0
84
Article Top Ad

பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி.யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் அமெரிக்காவுக்குள் நுழைய வழிவகுத்ததாகக் கூறப்படும் ‘கிரீன் கார்ட்’ லொட்டரி திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடைநிறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் திணைக்களம் (USCIS) இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் X-தளத்தில் தெரிவித்துள்ளார். “இந்த கொடூரமான நபர் எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவே கூடாது” என அவர் குறிப்பிட்டார்.

போர்த்துக்கேய குடிமகனான கிளாடியோ நேவ்ஸ் வலென்டே (48), பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழக்கவும், ஒன்பது பேர் காயமடையவும் காரணமானவர் என சந்தேகிக்கப்படுகிறார். மேலும், எம்.ஐ.டி.யைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரின் கொலைக்கும் அவர் தொடர்புடையவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பின்னர் அவர் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராவிடென்ஸ் நகர காவல்துறை அதிகாரியின் அறிக்கையின்படி, நேவ்ஸ் வலென்டே 2000 ஆம் ஆண்டு மாணவர் விசாவின்கீழ் பிரவுன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு அவருக்கு ‘டைவர்சிட்டி இமிக்ரன்ட் விசா’ வழங்கப்பட்டதுடன், சில மாதங்களில் சட்டபூர்வ நிரந்தர குடியுரிமை (Green Card) பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு கல்வியில் இடைவேளை எடுத்ததிலிருந்து 2017 ஆம் ஆண்டு விசா பெறும் வரை அவர் எங்கு இருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

‘டைவர்சிட்டி விசா’ திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் பெற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் 50,000 வரை லொட்டரி முறையில் கிரீன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுகின்றனர். இந்த திட்டம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டதனால், அதை இடைநிறுத்தும் நடவடிக்கைக்கு சட்ட சவால்கள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான லொட்டரிக்கு சுமார் 2 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 131,000-க்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர். போர்த்துகீசிய குடிமக்களுக்கு இதில் வெறும் 38 இடங்களே கிடைத்திருந்தன. லொட்டரியில் தேர்வு செய்யப்படுபவர்கள், தூதரக நேர்காணல் உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அமெரிக்காவுக்குள் அனுமதி பெறுவர்.

கிரீன் கார்ட் லொட்டரி திட்டத்துக்கு நீண்ட காலமாக டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த சம்பவத்தை முன்னிறுத்தி குடிவரவு கொள்கைகளை கடுமையாக்கும் முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. முன்னதாக, நவம்பர் மாதத்தில் தேசிய காவல்படையினர்மீது நடந்த தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கான் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து குடிவரவை கட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகளையும் அவரது நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருந்தது.

சட்டபூர்வ குடிவரவு வாய்ப்புகளையும் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனிடையே, அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறையை எதிர்த்த டிரம்பின் மனுவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.