ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு

0
40
Article Top Ad

 

தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து, தமிழர் அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்பு, கடற்தொழிலாளர் பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுகாஸ் கனகரத்தினம், கொள்கைப் பரப்புச் செயலாளர் நடராஜா காண்டீபன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பின்போது, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்த தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரவையினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கடுமையான பொருளாதார பின்னடைவை எதிர்கொண்டுள்ள இலங்கை, இந்தியாவின் பங்களிப்பின்றி வளர்ச்சியடைய முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், தமிழகத்துடன் பொருளாதார ரீதியான நெருக்கமான உறவுகள் மற்றும் தொடர்பாடல்கள் இல்லாமல் இலங்கையின் பொருளாதார மீளெழுச்சி பாரிய சவாலாகவே தொடரும் என்றும் சுட்டிக்காட்டினர். இந்நிலையில், இந்தியாவின் ஊடாக இலங்கையின் மீது கணிசமான அரசியல் அழுத்தத்தை உருவாக்கி, தமிழர்கள் விரும்பும் தீர்வைச் சாத்தியமாக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், தமிழக மற்றும் இலங்கை கடற்தொழிலாளர்கள் தொடர்பான நீண்டகால பிரச்சினை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. தமிழக மீனவர்களின் எல்லை தாண்டும் மீன்பிடி பிரச்சினையை இலங்கை அரசு தன் அரசியல் நலனுக்காகப் பயன்படுத்தி, தமிழகத்தையும் ஈழத் தமிழர்களையும் நிரந்தரப் பகையாளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை வாய்ப்பாகக் கொண்டு இந்திய நலன்களுக்கு முரணான வெளிச்சக்திகள் இலங்கையில் காலூன்றுவதையும் அவர்கள் எச்சரித்தனர். எனவே, எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அத்தோடு, கோரிக்கை மனுக்களையும் தமிழக முதலமைச்சரிடம் கையளித்தனர்.

அத்தோடு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானையும் சந்தித்துப் பேசியுள்ளனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில், தமிழர் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்காக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இதேவேளை தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியுடனும் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பொன்றை நடத்தினர்.  அவரிடமும் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படல் மற்றும் கடற்தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.