ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

0
81
Article Top Ad
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று கலந்துரையாடினார்.
இதன்போது, வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபாய், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வழங்கும் 50,000 ரூபாய் ஆகிய உதவித்தொகைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
வீடுகள் மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குதல், நாடு பூராகவும் பராமரிக்கப்படும் பாதுகாப்பு மையங்களின் செயற்பாடுகள்,மக்களை மீளக் குடியமர்த்தல்,வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் ஆகியவை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.
இழப்பீடு வழங்கும் செயற்பாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், எவரையும் கைவிடாத வகையில் இழப்பீடு பெற உரிமை உள்ள அனைவருக்கும் அதனை வழங்க வேண்டியதன் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இழந்த உயிர்களை மீளப்பெற முடியாவிட்டாலும், அந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான வசதிகளை வழங்குவதை மிகவும் செயற்திறனுடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தியுள்ளார்.