ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் இன்று (20) காலை பாறை சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசித்து வந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹல்துமுல்ல மாலதோல பின்னலந்த கிராமத்திற்கு மேலே அமைந்துள்ள மலைத்தொடரில் இருந்து பெரிய பாறை ஒன்று கீழே சரிந்ததையடுத்து, குறித்த நபர்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு நிலைமை பாதுகாப்பானது என அறிவிக்கும் வரை தமது வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆங்காங்கே மண்சரிவுகள், பாறை சரிவுகள் இடம்பெறுகின்றன.
ஆகவே, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த ‘நிலை–3’ (சிவப்பு) மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீட்டித்துள்ளது.
மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களமும் தெரிவித்துள்ளது.

