FIFA உலகக் கோப்பை டிக்கெட்டுகள் விலை உயர்வு: மீள்விற்பனை சட்டங்கள் ரசிகர்களுக்கு சவாலாகியுள்ளன

0
72
Article Top Ad

அடுத்த ஆண்டு டொரொண்டோவில் நடைபெறவுள்ள FIFA உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆரம்பத்திலிருந்தே அதிக விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், ஒன்ராறியோ மாகாணத்தின் மீள்விற்பனை விதிமுறைகள் ரசிகர்களின் சிரமத்தை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொராண்டோவில் நடைபெறும் ஆறு உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டவுடன் விரைவாக விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால் பெரும்பாலான ரசிகர்களுக்கு மீள்விற்பனை சந்தை மட்டுமே ஒரே வாய்ப்பாக மாறியுள்ளது. ஆனால் மாகாணத்தில் டிக்கெட் மீள்விற்பனைக்கு விலை வரம்பு இல்லாததால், மூன்றாம் தரப்பு விற்பனை தளங்களில் டிக்கெட்டுகள் மிக உயர்ந்த விலைகளில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஒன்ராறியோ அரசு, டிக்கெட் மீள்விற்பனை விலையை அசல் விலையை விட 50 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தியிருந்த சட்டப்பிரிவை நீக்கியது. இதன் பின்னர், டிக்கெட் விற்பனை தளங்கள் தங்களுக்கு விருப்பமான விலைகளை நிர்ணயிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் விளைவாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட ரசிகர்கள் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நேரில் காண முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கனடிய SHIELD நிறுவகத்தின் நிர்வாக இயக்குநர் வாஸ் பெட்னர், இத்தகைய நிலை டிக்கெட்டுகளை “ஆடம்பரப் பொருளாக” மாற்றிவிட்டதாகவும், முக்கிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் அதிக பணம் செலுத்தக்கூடியவர்களுக்கே உரியதாக மாறுவது சமூக ரீதியாக கவலைக்குரிய விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், டிக்கெட் மீள்விற்பனை நடைமுறைகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு அண்மையில் குறிப்பிட்டிருந்தார். உலக தொடர் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுத் தீர்ந்து, பின்னர் மிக உயர்ந்த விலையில் மீள்விற்பனைக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் அரசியல் கவனத்தை பெற்றுள்ளது.

ஒன்ராறியோ NDP மற்றும் லிபரல் கட்சிகளும், டிக்கெட் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இதேவேளை, குவெபெக் மாகாணம் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில், அசல் விலையை மீறி டிக்கெட் மீள்விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் சட்ட நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.