பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2001 ஆம் ஆண்டு இராணுவத்தினால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய பகுதியில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டார்.
மேலும், 2019 ஆம் ஆண்டு பாதாள உலகக் குழுத் தலைவர் என அறியப்படும் ‘மாகந்துரே மதூஷ்’ தொடர்பான விசாரணைகளின் போது, டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டிருந்ததாகவும், அந்தத் துப்பாக்கி வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலான பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

