
இலங்கையின் கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடக் கையேடு (Module) தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்விசார் செயலிக்குச் செல்வதற்குப் பதிலாக, பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்றது என கருதப்படும் இணையதளம் ஒன்றிற்கு வழிநடத்தப்பட்டமையே இதற்குப் பிரதான காரணமாகும். இந்தச் சம்பவம் பொலிஸ் விசாரணைகள், உயர்மட்ட இராஜினாமாக்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
டிஜிட்டல் கல்வியின் சவால்கள்
கல்வி கற்கும் செயலியைத் திறக்க வேண்டிய அந்த இணைப்பு (Link), ஆபாச உள்ளடக்கம் கொண்ட இணையதளத்திற்குத் திசைமாறியமை, சமூக ஆர்வலர் திலினி ஷால்வின் மூலம் முதன்முதலாக வெளிப்படுத்தப்பட்டது. தேசிய கல்வி நிறுவனம் (NIE) பாடத்திட்டத்தை நவீனமயமாக்க எடுத்த முயற்சி, முறையான சரிபார்ப்புகள் இல்லாததால் இளம் மாணவர்களுக்கு பெரும் ஆபத்தாக முடிந்துள்ளது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் செய்தி பரவியதும் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வணக்கத்திற்குரிய உலாப்பனே சுமங்கல தேரோ, இது நாட்டின் இளைஞர்களைச் சீரழிக்கும் ஒரு “திட்டமிட்ட சதி” எனக் குற்றம் சாட்டினார்.
இது அரசாங்கத்தின் திட்டமிட்ட திணிப்பு என ஒரு சாராரும், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிரணியினர் மேற்கொள்ளும் சதி என இன்னொரு சாராரும், அரசாங்கத்திற்குள்ளேயே கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரை பதவி நீக்க முன்னெடுத்துள்ள சதித்திட்டம் என வேறொரு தரப்பும் விமர்சனங்களை முன்வைத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
சட்ட நடவடிக்கை மற்றும் நிறுவன மாற்றங்கள்
இந்த விவகாரத்தை அடுத்து கல்வியமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, 2025 டிசம்பர் 31 அன்று CID யில் முறைப்பாடு செய்தார். அச்சிடும் பணியின் போது திட்டமிட்ட முறையில் நாசகார வேலைகள் நடந்திருக்கலாம் என அமைச்சு சந்தேகிக்கின்றது.
இந்தப் பொறுப்பற்றத் தன்மைக்கு தார்மீகப் பொறுப்பேற்று, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தனது பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் இறுதி பெறுபேறு என்னவாக இருக்கும் என்பதை அறிய முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அச்சிடப்பட்ட அனைத்துப் புத்தகங்களையும் மீளப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் சமூக விமர்சனங்கள்
தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்தத் தவற்றை “தரக்கட்டுப்பாட்டில் ஏற்பட்ட பாரிய தோல்வி” என விமர்சித்துள்ளார். இது கல்வி சீர்திருத்தங்கள் மீதான நம்பிக்கையை உடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரியவின் இராஜினாமாவைக் கோரி வருகின்றன. கியூ.ஆர் (QR) குறியீடுகள் மற்றும் யூடியூப் (YouTube) இணைப்புகளைப் பாடப்புத்தகங்களில் சேர்க்கும் போது, முறையான தொழிநுட்பத் தணிக்கை செய்யத் தவறியதே இதற்குப் பின்னடைவு என நிபுணர்கள் கருதுகின்றனர்.
பொருளாதார மற்றும் சமூக இழப்புகள்
அரசியல் சண்டைகளுக்கு அப்பால், இந்தப் பிழையினால் ஏற்பட்ட இழப்புகள் அதிகம். அச்சிடப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மீளப்பெறப்படுவதால், நாட்டின் வரிப்பணம் வீணடிக்கப்படும். இந்நிலையில், சர்ச்சைக்குரிய பக்கத்தை மாத்திரம் நீக்கிவிட்டு விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பாக கல்வியமைச்சு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது. காரணம், குறித்த பாடத்தொகுதிகளுக்காக 61 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் இலங்கையின் கல்வித்துறைக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். கல்வி மறுசீரமைப்புகள் வெற்றியடைய வேண்டுமெனில் புதுமை மட்டுமல்ல, கடுமையான தரக் கட்டுப்பாடு, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவையும் அவசியம் என்பதை தெளிவாக நினைவூட்டுகிறது. இளம் மாணவர்களின் பாதுகாப்பும், பெற்றோர் மற்றும் சமூகத்தின் நம்பிக்கையும் கல்விக் கொள்கைகளின் அடித்தளமாக இருக்க வேண்டிய நிலையில், இந்தத் தவறானது முழுக் கல்வி அமைப்பையே மறுபரிசீலனை செய்யத் தூண்டியுள்ளது. அரசியல் குற்றச்சாட்டுகளைக் கடந்து, முறையான விசாரணைகள், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தொழிநுட்பத் தணிக்கை நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டால் மட்டுமே, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். இல்லையெனில், கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், நம்பிக்கையிழப்பும் வீழ்ச்சியுமே அடையாளமாக மாறும் அபாயம் உள்ளது.
செய்தியாக்கம் – கே.கே.

