வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் – ஜனாதிபதியையும் கைதுசெய்தது

0
33
Article Top Ad

தென்னமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா இன்று காலை நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா அரசு நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது. தலைநகர் கராகஸ் மற்றும் மிரண்டா, அராகுவா போன்ற மாகாணங்களில் இன்று காலை அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட பெரும் வெடிப்புச் சத்தங்கள் மற்றும் கரும்புகை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து ஜனாதிபதி மதுரோ கைது செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிபட்டதாகவும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், வெனிசுவேலா துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை. அதிபரின் தற்போதைய இருப்பிடம் குறித்துத் தங்களுக்குத் தெரியவில்லை என்றும், அவருக்கு என்ன ஆனது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடுமாறு வெனிசுவேலா அரசு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது. நாட்டின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கிலேயே அமெரிக்கா இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியதாக வெனிசுவேலா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதாகக் கூறி வெனிசுவேலா எல்லைகளில் அமெரிக்கா தனது இராணுவக் குவிப்பை அதிகரித்து வந்தது. இதன் பெறுபேறு, தற்போது நேரடி இராணுவ நடவடிக்கையாக மாறியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வெனிசுவேலா கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தென் அமெரிக்க பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

சர்வதேச நாடுகளின் எதிர்வினைகள் மற்றும் கண்டனங்கள்

வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலுக்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகவும், எந்தவொரு தகுந்த ஆதாரமும் இன்றி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஈரான் மற்றும் கியூபா ஆகிய நாடுகள், இது ஒரு நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்றும், அமெரிக்கா தனது காலனித்துவப் போரைத் திணிக்க முயற்சிப்பதாகவும் சாடியுள்ளன.

அண்டை நாடான கொலம்பியா, இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதே லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் எண்ணெய் சந்தை

இந்த இராணுவ நடவடிக்கையின் நேரடிப் பெறுபேறு உலகளாவிய எரிபொருள் சந்தையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. வெனிசுவேலா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடு என்பதால், அங்கு ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $60-ஐத் தாண்டி உயர்ந்துள்ளன. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடல்வழி முற்றுகை காரணமாக, வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெனிசுவேலாவின் உள்நாட்டுப் பொருளாதாரமும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அந்நாட்டு நாணயமான பொலிவர் (Bolívar) மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதுடன், பணவீக்கம் 600 சதவீதத்தை எட்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், எரிபொருளுக்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.