வங்காள விரிகுடாவில் ஆழமான தாழமுக்கம் – நாடு முழுவதும் கனமழை, பலத்த காற்று, வெள்ளம் மற்றும் கடல் அபாய எச்சரிக்கைகள்

0
59
Article Top Ad

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகி விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த வானிலைத் தொகுதி தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்து, 2026 ஜனவரி 9ஆம் திகதி மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஹம்பாந்தோட்டை – கல்முனை பகுதிகளுக்கு இடையில் இலங்கைக் கரையை ஊடறுத்துச் செல்லும் சாத்தியம் அதிகம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, இந்த தாழமுக்கம் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 250–350 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், அடுத்த சில மணித்தியாலங்களில் கிழக்குக் கரையை அண்மிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா, தென், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழையும், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை, திருகோணமலை மாவட்டங்களில் 100–150 மி.மீ வரையான பலத்த மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணம், மன்னார், மொனராகலை, பதுளை, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும். மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 75–100 மி.மீ மழை இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் வரை தொடரக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50–60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக மேலும் வேகமான காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள் மற்றும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் உட்பட ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு, மொனராகலை மாவட்டங்களில் அவ்வப்போது 60–70 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் நிலைமை தொடர்பில், காங்கேசந்துறை முதல் திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் கொந்தளிப்பு முதல் மிகவும் கொந்தளிப்பு நிலை வரை காணப்படும் எனவும், அங்கு 2.5 – 3.5 மீற்றர் வரை அலை உயரம் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலி முதல் கொழும்பு, புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் கொந்தளிப்பான நிலை எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என மீனவ சமூகத்தினரும் கடலில் பயணம் செய்வோரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெள்ள அபாயம் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அமைந்துள்ள ஆற்றுப் படுக்கைகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பெரும்பாலான குளங்களின் நீர்மட்டம் 80–90 சதவீதம் வரை நிரம்பியுள்ளதுடன், சில பிரதான மற்றும் நடுத்தர அளவிலான குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர மழை தொடர்ந்தால் மேலும் வான் கதவுகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசர நிலைமைகளை எதிர்கொள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் முழுமையாக தயார்நிலையில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிடும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகளை உன்னிப்பாக கவனித்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.