அபாய நிலை தொடர்பாக நிபுணர்களிடமிருந்து முறையான அறிக்கை பெற்றுக்கொண்டு, இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை அம்புலுவாவ மலையில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவித்துள்ளது.
அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தின் முகாமைத்துவத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள, சுற்றாடல் அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக்கிணங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து அம்புலுவாவ சுற்றாடல் வலயத்தை அவதானிக்கும் நோக்கில் எதிர்வரும் நாட்களில் கள விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் அழகிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கம்பளை நகருக்கு வருபவர்களுக்கு தெளிவாகக் காட்சியளிக்கும் இந்த மலை உச்சி, இயற்கை அழகால் தனித்துவம் பெறுகிறது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள அம்புலுவாவ பல்லுயிர் பெருக்க வளாகம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் முக்கிய இடமாக உள்ளது. கம்பளை – ஹெம்மாத்தகம வீதியில் பயணிக்கும் போது, சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அம்புலுவாவவுக்கான பிரதான நுழைவாயில் அமைந்துள்ளது. அங்கிருந்து மேலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மலை உச்சியை நோக்கிச் செல்லும் வழியில் அம்புலுவாவ விகாரையை அடைய முடியும்.
927 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அம்புலுவாவ, அதிகளவிலான தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழும் உயர் பல்லுயிர் தன்மையைக் கொண்ட சூழல் அமைப்பாகும்.

