‘டித்வா’ புயல் பாதிப்பு: புதிதாக சுமார் 25000 வீடுகளை கட்டவேண்டியுள்ளதென ஜனாதிபதி தெரிவிப்பு

0
18
Article Top Ad

‘டித்வா’ புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் கீழ், சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தையும், வீடு ஒன்றைக் கட்டுவதற்காக 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அறிக்கைகளின் படி, சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் 17,000 முதல் 18,000 வீடுகள் வரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வசிக்க முடியாத அபாய நிலையிலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில், மொத்தமாக 20,000 முதல் 25,000 வீடுகள் வரை கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கிடையில், 2026 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளை நிர்மாணிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதில், ‘எமக்கு ஒரு வீடு’ திட்டத்தின் கீழ் கிராமப்புற வறிய மக்களுக்காக 10,000 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக மேலும் 10,000 வீடுகளும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போதிலும், இன்னும் பலர் முகாம்களில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்காக 2,500 வீடுகளை தலா 20 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அதேபோல், தோட்டப்புற மக்களுக்காக இந்திய அரசின் உதவியுடன் வீடுகளை அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

இவ்வாறான சூழலிலேயே, மேலதிகமாக இந்த 25,000 வீடுகளை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்பிருந்ததை விட மேம்பட்ட வாழ்க்கை நிலையை ஏற்படுத்தும் நோக்கில், வீடு ஒன்றுக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிதி, 20, 15 மற்றும் 15 இலட்சம் ரூபாய் என மூன்று கட்டங்களாக வழங்கப்படும் என்றும், நிதி வழங்கலில் எந்தவித தாமதமும் ஏற்படாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

மேலும், 2 முதல் 3 மாதங்களுக்குள் வீடுகளை விரைவாகக் கட்டி முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய தினம் 26 பேருக்கு தலா 50 இலட்சம் ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளான சிறந்த வருமான வாய்ப்பு, பிள்ளைகளுக்கான தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, பாதுகாப்பான இல்லம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே அரசின் பிரதான நோக்கம் எனவும் வலியுறுத்தினார்.