இலங்கையில் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிப்பு

0
19
Article Top Ad

நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, வறுமைப் பகுப்பாய்வு நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025–2030” எனும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். இலங்கையில் நிலவும் இவ்வறுமைச் சவாலுக்கு தீர்வுகாண, பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வறுமைப் பகுப்பாய்வு நிலையம் மற்றும் ODI Global நிறுவனத்தின் அனுசரணையில், சுயாதீனக் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட “இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025–2030” எனும் அறிக்கை அண்மையில் கொழும்பு மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை, இலங்கையின் நெருக்கடிக்குப் பின்னரான பொருளாதார மீட்சிக்குத் தேவையான கட்டமைப்பு மறுசீரமைப்புகள் மற்றும் வறுமையைக் குறைப்பதை மையமாகக் கொண்ட கொள்கை கட்டமைப்பை முன்வைத்துள்ளது.

இந்நிகழ்வில் மேலதிகமாக கருத்துத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் திருமதி இவெட் பெர்னாண்டோ, வறுமை உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த தேசியத் திட்டம் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

“இதுவரை நாம் சில முயற்சிகளை தனித்தனியாக மேற்கொண்டு வருகிறோம். அவை சில நல்ல பெறுபேறுகளைத் தருகின்றன. ஆனால், அவற்றை மையப்படுத்தப்பட்ட ஒரு செயல்திட்டத்தின் கீழ் கொண்டு வந்து, முறையான நிர்வாகத்துடனும் தொடர்ச்சியான பின்தொடர் நடவடிக்கைகளுடனும் செயல்படுத்தினால், மேலும் சிறந்த விளைவுகளைப் பெற முடியும். அதற்காக அரசாங்கத் தரப்பில் இரண்டு குழுக்கள் அல்லது ஒரு ஆணைக்குழுவை நியமிப்பது குறித்து ஆலோசனையை முன்வைத்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here