வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக ஈரானில் தொடரும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கிடையில், நாட்டின் மூலோபாய உள்கட்டமைப்புகள் மற்றும் பொது சொத்துகளை பாதுகாப்பதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. அதேவேளை, எதிரியின் சதிகளை மக்கள் முறியடிக்க வேண்டும் எனவும் இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இஸ்ரேலும் எதிர்மறை பயங்கரவாதக் குழுக்களும் நாட்டின் பொது பாதுகாப்பை பாதிக்க முயற்சிப்பதாக ஈரான் இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. உயர் தளபதி வழிகாட்டுதலின் கீழ், தேசிய நலன்கள், மூலோபாய கட்டமைப்புகள் மற்றும் பொது சொத்துகள் உறுதியாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், போராட்டங்களை கட்டுப்படுத்த இணைய சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், ஈரான் மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மற்றொரு புறம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), நாட்டின் பாதுகாப்பும் 1979 புரட்சியின் சாதனைகளும் சிவப்பு கோடு என எச்சரித்துள்ளது. ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமெனி, போராட்டக்காரர்களை நாசகாரர்கள் என குறிப்பிட்டதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலையீட்டால் அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனவரி 3 முதல் ஈரான் முழுவதும் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

