தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக தனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் கவலையும் தன்னால் புரிந்துகொள்ள முடிவதாக, முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
காணொளி ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்த அவர், 2001ஆம் ஆண்டு தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் நீதிமன்றம் பிணை வழங்கியதன் அடிப்படையில் தாம் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளில் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர்” என அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு பல காரணங்களுக்காக தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறிய டக்ளஸ் தேவானந்தா, தனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் முன்வைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றியை தெரிவித்தார்.
அத்துடன், அந்த நியாயங்களை புரிந்து கொண்டு தீர்ப்பளித்த கம்பஹா மாவட்ட நீதவானுக்கும் தனது நன்றிகளை உரித்தாக்குவதாக அவர் தெரிவித்தார்.
Video link – https://web.facebook.com/share/v/1C8FZkXwnV/

