ஈரான் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை உயர்வு

0
51
Article Top Ad

ஈரானைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றங்கள் காரணமாக உலக எண்ணெய் சந்தையில் இன்று எண்ணெய் விலைகள் உயர்வடைந்தன. விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் என்ற அச்சம், வெனிசுவேலாவிலிருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வழங்கல் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பை விட மேலோங்கியதாக சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.

Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 28 சென்ட் உயர்ந்து 64.15 அமெரிக்க டொலராக விற்பனையாகியுள்ளது. இது கடந்த இரண்டு மாதங்களில் பதிவான உயர்ந்த நிலைகளுக்கு அண்மித்தவாறு இந்த விலை உள்ளது. அதேபோல், அமெரிக்க West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 28 சென்ட் உயர்ந்து 59.78 டொலராக பதிவாகியது. இது டிசம்பர் 8க்கு பிறகு காணப்பட்ட உச்ச விலையாகும்.

OPEC அமைப்பின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஈரானில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. போராட்டக்காரர்களுக்கு எதிராக உயிரிழப்புகள் ஏற்பட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஈரான் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மூத்த ஆலோசகர்களுடன் ட்ரம்ப் கலந்துரையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ஏற்கனவே தடைகளுக்கு உட்பட்டுள்ள ஈரான் எண்ணெய் விநியோகத்தில் கூடுதல் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Barclays வங்கி வெளியிட்ட குறிப்பில், “ஈரானில் நிலவும் அமைதியின்மை எண்ணெய் விலையில் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3 முதல் 4 டொலர் வரை அரசியல் அபாயக் கட்டணத்தை (geopolitical risk premium) சேர்த்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெனிசுவேலா மீண்டும் சர்வதேச சந்தைக்கு எண்ணெய் வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையை பாதித்து வருகிறது. அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கத்திய தடைகளுக்கு உட்பட்டு சுமார் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெய் அமெரிக்காவிற்கு வழங்கப்படலாம் என ட்ரம்ப் அண்மையில் கூறியிருந்தார்.

அதேநேரம், உக்ரைனின் இரண்டு முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவில் மத்திய வங்கி (Federal Reserve) மீது ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் விமர்சனங்களும், எதிர்கால பொருளாதார நிலை மற்றும் எண்ணெய் தேவையைக் குறித்து சந்தையில் நிச்சயமற்ற நிலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.