பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

0
23
Article Top Ad

தையிட்டி விஹாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விஹாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விஹாராதிபதியைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே தேரர் இதனைக் கூறினார்.

வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், அதில் தையிட்டி திஸ்ஸ விஹாரை தொடர்பான பிரச்சினை முக்கியமானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்குள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் தெளிவாக வலியுறுத்தியதாகவும், ஜனாதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகின்றது எனவும் கூறினார்.

விஹாரைக்கு அருகிலுள்ள மக்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, இந்த விடயத்தில் விரைவாக ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தையிட்டி திஸ்ஸ விஹாரை பிரச்சினைக்கும் தன்னுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றும், அது நயினாதீவு நாக விஹாரையின் விஹாராதிபதியுடன் தொடர்புடைய விடயம் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது சார்பாகவே இந்தக் கருத்தை முன்வைத்ததாக அவர் கூறினார்.

மேலும், இப்பகுதியில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் தீவிரமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வடக்கு மாகாணத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்ததாக தெரிவித்தார்.