ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென் அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பான மெர்கோசூர் (Mercosur) ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள், 25 ஆண்டுகளாக நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், சனிக்கிழமை பாரகுவேயில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றிலேயே மிகப் பெரிய வர்த்தக உடன்படிக்கைக்கு வழி திறக்கப்பட்டுள்ளது.
இரு பிராந்தியங்களுக்கிடையிலான சுங்க வரிகளை குறைத்து வர்த்தகத்தை ஊக்குவிப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இருப்பினும், இது நடைமுறைக்கு வருவதற்கு முன் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஒப்புதலையும், மெர்கோசூர் உறுப்புநாடுகளான அர்ஜென்டினா, பிரேசில், பரகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளின் சட்டமன்றங்களின் உறுதிப்படுத்தலையும் பெற வேண்டும்.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கையெழுத்து விழாவில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், ஐரோப்பிய பேரவையின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் மெர்கோசூர் நாடுகளின் ஜனாதிபதிகளுடன் கலந்து கொண்டனர். பிரேசில் ஜனாதிபதி இதில் நேரடியாக பங்கேற்காமல், தனது வெளிநாட்டு அமைச்சரை பிரதிநிதியாக அனுப்பினார்.
இந்த ஒப்பந்தம் கடந்த வாரம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கவலை தெரிவித்துள்ளன. குறைந்த விலையில் தென் அமெரிக்க வேளாண் இறக்குமதிகள் அதிகரிக்கும் என்றும், வன அழிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கையெழுத்து விழாவிற்கு முன்னதாக பிரேசில் ஜனாதிபதியை சந்தித்த வான் டெர் லெயன், இந்த ஒப்பந்தம் உலகிலேயே மிகப் பெரிய சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்கும் என தெரிவித்தார். “இந்த ஒப்பந்தம் உலகிற்கு வலுவான செய்தியை அனுப்புகிறது. சுங்க வரிகளுக்கு பதிலாக நியாயமான வர்த்தகத்தையும், தனிமைப்படுத்தலுக்கு பதிலாக நீண்டகால கூட்டாண்மையையும் நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம்” என அவர் கூறினார்.
இதற்கிடையில், நேற்றைய கையெழுத்து விழாவிற்கு முன்பாக, அமெரிக்காவிற்கு கிரீன்லாந்தை வாங்க அனுமதி வழங்கப்படாவிட்டால் எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகரிக்கும் சுங்க வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
“மதிப்புகளை கைவிடாமல், அதிகரித்து வரும் அரசியல் அதிர்வுகளை எதிர்கொள்ள இரு பிராந்தியங்களுக்கும் இந்த ஒப்பந்தம் உதவும்; இது பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்” என அன்டோனியோ கோஸ்டா தெரிவித்தார்.
ஒப்பந்தத்தின் சில விதிமுறைகள் தொடர்பாக மெர்கோசூர் அதிகாரிகள் சில தயக்கங்களை வெளிப்படுத்தியிருந்தாலும், இது இரு தரப்புக்கும் அதிக வாய்ப்புகளையும், வர்த்தக மற்றும் முதலீட்டு வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என பிரேசில் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை ரியோ டி ஜனீரோவில் தெரிவித்தார்.
பிரேசில் அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்த ஒப்பந்தம் சந்தைகளை விரிவுபடுத்தி பல்வகைப்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிகளை பிரதிபலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, வியட்நாம் ஆகிய நாடுகளுடனும், இந்தியாவுடனான சுங்கச் சலுகை ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்கும் பிரேசில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
700 மில்லியன் மக்களை உள்ளடக்கிய EU–மெர்கோசூர் சந்தைகளுக்கிடையிலான வர்த்தகம் 2024ஆம் ஆண்டில் 111 பில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிகளில் இயந்திரங்கள், இரசாயனப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் முக்கியமானவை. மெர்கோசூர் நாடுகளின் ஏற்றுமதிகள் வேளாண் பொருட்கள், கனிமங்கள், மரச் சாறு மற்றும் காகிதம் ஆகியவற்றில் அதிகமாகக் காணப்படுகின்றன.

