FIFA உலகக் கிண்ணப் போட்டிகள்: கனடாவின் சுகாதார அமைப்பு மீது கூடுதல் அழுத்தம் ஏற்படும் அபாயம்

0
55
Article Top Ad

டொறொண்டோ மற்றும் வான்கூவர் நகரங்கள் இணைந்து FIFA உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தத் தயாராகி வரும் நிலையில், கனடாவின் ஏற்கனவே கடும் அழுத்தத்தில் உள்ள சுகாதார அமைப்பு கூடுதல் தேவையை சமாளிக்க முடியுமா என்ற கவலை எழுந்துள்ளது.

கனடிய மருத்துவ சங்க இதழில் வெளியான கட்டுரையில், அவசர வைத்திய நிபுணர் டொக்டர் கேதரின் வர்னர், கனடாவின் சுகாதார அமைப்பு தொடர்ந்து அதிகபட்ச திறனில் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்கள் வருகை தரும் போது இது பெரும் சவாலாக மாறக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.

முன்னைய அனுபவங்களின் அடிப்படையில், பெருந்திரளான நிகழ்வுகளின் போது தொற்றுநோய்கள், உணவு மூலம் பரவும் நோய்கள், மதுபானம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை அவசர சிகிச்சைப் பிரிவுகளை கடுமையாகப் பாதிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. 2010 குளிர்கால ஒலிம்பிக்கின் போது வான்கூவரில் சின்னம்மை பரவல் ஏற்பட்டதையும், கல்கரி ஸ்டாம்பீட் விழாக்களில் காயங்கள் மற்றும் போதைப் பொருள் தொடர்பான அவசர அனுமதிகள் அதிகரிப்பதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் டொறொண்டோவில் ஆறு போட்டிகளும், வான்கூவரில் ஏழு போட்டிகளும் நடைபெறவுள்ள நிலையில், நான்கு வாரங்களில் இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் கனடாவுக்கு வருகை தரவுள்ளனர். இதனால் சின்னம்மை, கொவிட்-19 மற்றும் உணவு, நீர் மூலம் பரவும் நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே, சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகள் அவசர நிலைகளை எதிர்கொள்ளத் தேவையான திட்டங்கள் உள்ளதாகவும், அவசியமானால் தேர்வுச் சிகிச்சைகளை ஒத்திவைத்து வளங்களை அவசர தேவைகளுக்காக மாற்றும் நடைமுறைகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். கூடுதல் நிதியுதவியும் அவசர வளங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், டொறொண்டோ நகராட்சி பொது சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்பு கண்காணிப்பு, கழிவுநீர் பரிசோதனை, வெப்பம் மற்றும் காட்டுத் தீ புகை போன்ற அவசர நிலைகளுக்கான தகவல் தொடர்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் காலத்தில் தடுப்பூசிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். போட்டிகள் சுகாதார ரீதியாக பாதுகாப்பாக நடைபெறுமா என்பது, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் செயற்பாட்டில் தான் தங்கியுள்ளது.